ஊழல்வாதிகளை ஒன்று சேர்த்த அமலாக்கத் துறை - மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கிண்டல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2004 முதல் 2014 வரை நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ஏராளமான ஊழல்கள் நடந்தன. ஒவ்வொரு வாய்ப்பையும் அந்த அரசு பிரச்சினையாக மாற்றியது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களவையில் பதிலளித்துப் பேசினார். அவர் பேசியதாவது:

மக்களவையில் ஒவ்வொரு உறுப்பினரும் விவாதத்தில் கலந்து கொண்டு, தங்களது வாதங்களை முன்வைத்தனர். எதிர்க்கட்சி எம்பிக்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் ஒவ்வொருவரும் தங்களது குணநலன்களுக்கு ஏற்ப உரையாற்றினர். சிலரின் பேச்சு அவர்களை மக்களிடையே அம்பலப்படுத்தியது. சிலர் பேசியதை கூர்ந்து கேட்ட போது அவர்களுக்கு திறனும் புரிதலும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று பேசியதை கேட்ட மகிழ்ச்சியில் சிலர் நன்கு உறங்கிவிட்டனர். அவர்களால் உரிய நேரத்தில் எழுந்து அவைக்கு வரமுடியவில்லை.

அவையில் பேசிய ஒருவர் கூட குடியரசுத் தலைவரின் உரை பற்றி குறிப்பிடவில்லை. இதற்கு பின்னால் உள்ள காரணத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், குடியரசுத் தலைவரின் உரையை 140 கோடி மக்களும் ஏற்றுக்கொண்டனர். குடியரசுத்தலைவர் உரையை சிலர் புறக்கணித்தனர். பெரிய தலைவர் ஒருவர் குடியரசுத் தலைவரை அவமதித்தார். இது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது. நாடாளுமன்ற பேச்சு மூலம் பழங்குடியினர் சமுதாயத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.

நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரால், இன்று பழங்குடியின சமூகத்தின் பெருமை மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக அவருக்கு இந்த நாடும், மக்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

2004-ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒவ்வொரு வாய்ப்புகளையும் பிரச்சினையாக மாற்றியது. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பெரும்பான்மையான ஊழல்கள் அரங்கேறின. ஊழலுக்கான தசாப்தமாக அந்த 10 ஆண்டுகள் இருந்தன. காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் காரணமாக நமது நாட்டு வீரர்களால் சாதனை படைக்க முடியவில்லை. இந்த காலகட்டத்தில்தான் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சி அடைந்தது.

இந்த தசாப்தம் இந்தியாவுக்கான தசாப்தம். நெருக்கடியில் உள்ள சிலர், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை கண்டு வருத்தப்படுகின்றனர். நிர்பந்தத்துக்காக எந்த சீர்திருத்தங்களையும் நாங்கள் செய்ய வரவில்லை. ஜனநாயக நாட்டில் விவாதம் என்பது முக்கியமான விஷயம்.

பொருளாதார வளர்ச்சியை கருத்தில்கொள்ளாமல் சிலர் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் குறித்து குற்றம்சாட்டுகின்றனர். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காக அரசு நிறுவனங்கள் அவமானப்படுத்தப்பட்டன. துணிச்சலுடன் இருந்ததற்காக பாதுகாப்புபடைகள் மீது அவதூறு பரப்பப்பட்டன.

நீதிமன்ற தீர்ப்புகள் சாதகமாக இல்லாத போது நீதிமன்றங்களையும் சிலர் அவதூறு செய்தனர். தேர்தலில் தோற்றபோது தேர்தல் ஆணையத்தையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் அவதூறு செய்தனர்.

எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் அமைப்பாக அமலாக்கத்துறை உள்ளது. இதற்காக அந்த அமைப்புக்கு எதிர்க்கட்சிகள் நன்றி தெரிவிக்க வேண்டும். வாக்காளர்களால் கூட எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்த முடியவில்லை. அந்த வேலையை அமலாக்கப்பிரிவு செய்தது. வருங்காலத்தில் காங்கிரஸின்வீழ்ச்சி குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு செய்யும். நாடு வளர்ந்து வரும் நேரத்தில் பிற நாடுகளை தாழ்த்திபேசுவதாக சிலர் புகார் கூறுகின்றனர். வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடையாதவர்கள், தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

மோடியை விமர்சித்தால் மட்டுமே தங்களால் அரசியலில் பிழைக்க முடியும் என சிலர் நினைக்கின்றனர். 22 ஆண்டுகளாக எதிர்க்கட்சியினர் என்னை விமர்சித்து வருகின்றனர். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையை நாட்டுக்காகவும், நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்காகவும் அர்ப்பணித்துள்ளேன். விமர்சனங்களில் இருந்து என்னை காக்கும் கவசமாக மக்களுடைய ஆதரவுமட்டுமே இருந்தது. மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எதிர்க்கட்சிகளின் புரிதலுக்கு அப்பாற்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டின் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தி உள்ளோம். நமது நாட்டை அணுக எதிரி நாடுகள் அஞ்சுகின்றன. உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது இந்தியா. கரோனா பெருந்தொற்று போன்ற அனைத்து பிரச்சினைகளையும் தாண்டி நம் நாடு முன்னேறிவருகிறது. கரோனா காலத்தில் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி நமது நாடு சாதனை படைத்தது. இந்தியாஉற்பத்தி மையமாக மாறிக்கொண்டிருப்பதை உலகநாடுகள் பார்த்து வியந்து வருகின்றன.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைஎந்தவித தீவிரவாதமும் நடைபெறவில்லை. நாட்டின் பொருளாதாரமும் நல்லவளர்ச்சியைப் பெற்றுள்ளது. விலைவாசி குறைந்துள்ளது. டிஜிட்டல் முறையில் பல லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெறுகிறது. டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்