ராஜினாமா விவகாரம்: சோனியாவை சந்திக்க நாராயண் ரானே முடிவு

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிரா மாநில தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே, தனது ராஜினாமா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசவுள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை முதல்வர் பிருத்விராஜ் சவாணிடம், தனது ராஜினாமா கடிதத்தை நாராயண் ரானே கொடுத்தார். அது இன்னமும் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பிருத்விராஜ் சவாண், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்ராவ் தாக்கரே ஆகியோரை நாராயண் ரானே செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

பின்னர், அது தொடர்பாக செய்தியாளர்களிடம் நாராயண் ரானே கூறியதாவது: “எனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுமாறு பிருத்விராஜ் சவாண் வலியுறுத்தினார். ஆனால், எனது கோரிக்கைகள் ஏற்கப்படாமல் இருக்கும் வரை ராஜினாமா முடிவில் மாற்றமில்லை என்று அவரிடம் தெரிவித்தேன்.

இறுதியில், எனது ராஜினாமா கடிதம் தொடர்பாக அடுத்த இரு நாட்களுக்குள் நானும், பிருத்விராஜ் சவாண், மாணிக்ராவ் தாக்கரே ஆகியோரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்துவது என முடிவு செய்துள்ளோம்” என்றார்.

காங்கிரஸ் மாநில தலைவர் பொறுப்பு தருவதாக முதல்வர் கூறினாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “அப்படி எந்தவொரு யோசனையும் தெரிவிக்கப்படவில்லை” என்றார் நாராயண் ரானே.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பிருத்விராஜ் சவாண் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகம் தொடர்பாக ரானே எழுப்பிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். அது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் மோகன் பிரகாஷிடம் பேசவுள்ளேன். மாநில அளவில் நாராயண் ரானே எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பேன். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ராஜினாமா விவகாரத்திற்கு முடிவு காண்போம்” என்றார்.

முன்னதாக, கடந்த திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய நாராயண் ரானே, “2005-ம் ஆண்டு சிவசேனைக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தபோது, அடுத்த 6 மாதத்தில் என்னை முதல்வராக்குவதாக கட்சித் தலைமை வாக்குறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பிருத்விராஜ் சவாணின் ஆட்சி நிர்வாகம் சரியில்லை. இதே நிலை நீடித்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும். அந்த தோல்வியில் கூட்டாளியாக இருக்க தான் விரும்பவில்லை” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

கடந்த மக்களவைத் தேர்தலில், மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 2-ல் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களின் ஆதரவை மீண்டும் பெறுவதற்கு காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. ரானேவின் ராஜினாமாவும், அவர் தெரிவித்து வரும் கருத்துகளும் சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE