“என் மீதான இந்தியாவின் நம்பிக்கை, எதிர்க்கட்சிகளுக்குப் புரியாது” - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “மோடி மீதான இந்தியாவின் நம்பிக்கை என்பது எதிர்க்கட்சிகளின் புரிதலுக்கு அப்பாற்பட்டது” என்று நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று உரை நிகழ்த்தினார். அப்போது, ''நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நமக்கும் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) நாட்டு மக்களுக்கும் சிறப்பாக வழிகாட்டி உள்ளார். அவர் குடியரசுத் தலைவராக இருப்பது நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கமளிக்கிறது.

பழங்குடி சமூகத்தின் பெருமைமிகு அடையாளமாக நமது குடியரசுத் தலைவர் உள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு பழங்குடி மக்களுக்கு பெருமித உணர்வும், தன்னம்பிக்கையும் திரவுபதி முர்முவால் கிடைத்துள்ளது. இதற்காக நாடு அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பெருந்தொற்று, (உக்ரைன்) போர் உள்ளிட்ட காரணங்களால் உலகம் பிளவுபட்டுள்ளது. இந்தச் சூழலிலும், இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நமது நாடு உறுதியாக நிற்கிறது. நாட்டு மக்கள் அனைவர் மனங்களிலும் நம்பிக்கையும் பெருமித உணர்வும் நிரம்பி உள்ளது.

குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது சிலர் அதை புறக்கணித்துவிட்டு செல்கிறார்கள். ஒரு பெரிய தலைவரோ குடியரசுத் தலைவரையே அவமதிக்கும் வகையில் பேசுகிறார். அவர்களின் உள்ளங்களில் ஆழமாக ஊறிப்போன வெறுப்பின் வெளிப்பாடாகவே அது இருந்தது.

கரோனா பெருந்தொற்று மற்றம் போர் காரணமாக பல நாடுகளில் நிலையற்ற தன்மை உருவாகி உள்ளது. பணவீக்கமும் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலிலும் இந்தியா 5-வது பொருளாதாரமாக உருவெடுத்திருக்கிறது என்றால், நாட்டு மக்களில் யாருக்குத்தான் பெருமிதம் இருக்காது? நமது நாட்டின் இந்த சாதனை யாருக்கேனும் வேதனையை தந்திருக்குமானால், அவர்கள் தங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை, நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் பார்க்கிறது. ஜி20 தலைமையை ஏற்கும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம். இது 140 கோடி மக்களையும் பெருமிதம் கொள்ள வைத்துள்ளது. ஆனால், இதுகூட சிலரை வேதனைப்பட வைத்துள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.

இந்தியா வலிமை பெற்றுள்ளது; அதன் மதிப்பு உயர்ந்துள்ளது; அதன் மீதான நம்பகத்தன்மை மேம்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. உலகில் உள்ள நம்பகமான அமைப்புகளும், ஆழமாக ஆராயும் நிபுணர்களும் இந்தியாவை நம்பிக்கையுடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கிறார்கள். இது எப்படி நிகழ்கிறது? ஒட்டுமொத்த உலகமும் எப்படி இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. இந்திய வரலாற்றிலேயே 2004-14 காலகட்டம்தான் முழுமையான ஊழல் காலகட்டம். அந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பல பகுதிகளிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்தன.

மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக வருவதாலோ அல்லது தொலைக்காட்சிகளில் தோன்றுவதாலோ அல்ல. மக்களின் நலனுக்காக ஒட்டுமொத்த வாழ்க்கையையும் செலவிட்டு வருவதால். மோடி மீதான இந்தியாவின் நம்பிக்கை, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டது.

இந்தியாவின் தொழில்நுட்ப கட்டமைப்புகள் அதன் வலிமைக்கு மிகப் பெரிய காரணம். அதுதான் நவீன இந்தியாவை உருவாக்கி வருகிறது. இது குறித்து உலகம் ஆய்வு செய்து வருகிறது. ஜி20 மாநாட்டுக்காக நான் பாலி சென்றபோது, டிஜிட்டல் இந்தியா குறித்து பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். இந்தியாவில் இது எவ்வாறு சாத்தியமாகியது என்பதை அறிந்து கொள்ள அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். ஆனாலும், இந்தியாவின் முன்னேற்றத்தை, வளர்ச்சியை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாட்டு மக்கள் நிகழ்த்தி வரும் சாதனையைப் பார்க்க அவர்கள் மறுக்கிறார்கள். இந்தியா இன்று அடைந்துள்ள அத்தனை சாதனைகளும் 140 கோடி மக்களால் ஏற்பட்டது'' என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்