தமிழக ஆளுநரிடம் நிலுவையிலுள்ள ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து கருத்து கூற மத்திய அரசு மறுப்பு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தமிழக ஆளுநரிடம் நிலுவையிலுள்ள ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்ட மசோதா மீது கருத்து கூற இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை இன்று மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கான பதிலாக அளித்துள்ளது.

இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் தென் சென்னை எம்.பியான தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்வியில், ''ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இதுவரை அனுமதி வழங்கவில்லை. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து இதுவரை 40 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?” எனக் கேட்டிருந்தார்.

அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று அளித்த பதிலில், "ஒரு மாநிலத்தில் நடைபெறும், குறிப்பிட்ட விவகாரம் குறித்து இங்கு பதில் கூற இயலாது. 19 மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மசோதாவை கொண்டு வந்துள்ளன. அனைத்து மாநிலங்களும் முன்வந்தால் தேசிய அளவில் மசோதா கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசிக்கும்.

எனவே, தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டிருக்கிறார் என்பது குறித்து கருத்து கூற இயலாது'' என அமைச்சர் பதில் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE