புனித ஹஜ் யாத்திரைக்கான மத்திய அரசின் புதிய கொள்கை - பல்வேறு சலுகைகளால் ரூ.50 ஆயிரம் வரை செலவு குறையும்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகையின்போது உலகம் முழுவதிலும் வாழும் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் யாத்திரை செல்வது வழக்கம். இந்தியாவிலிருந்து செல்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் அளித்து வருகின்றன. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சார்பில் முதன்முறையாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக மத்திய சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் புதிய கொள்கை அறிவிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து இத்துறை சார்பில்நேற்று வெளியான ட்விட்டர் பதிவில், “வரலாற்று சிறப்புமிக்க புதிய கொள்கையின் மூலம் ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு பல்வேறு நிதிச் சலுகைகள் கிடைக்கும். முதன்முறையாக இதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக அளிக்கப்பட உள்ளன. ஹஜ் யாத்திரைக்கான செலவில் ரூ.50,000 வரை குறையும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பதிவுக்கு பிறகு மத்தியசிறுபான்மையினர் நல அமைச்சக வட்டாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன்படி ரூ.300-க்கு விநியோகிக்கப்பட்ட ஹஜ் யாத்திரைக்கான விண்ணப்பம் இனி இலவசமாக வழங்கப்பட உள்ளது. தேவையை பொறுத்து 2023-ம் ஆண்டு ஹஜ் யாத்திரை புறப்பாட்டுக்கு கூடுதலாக எட்டுஇடங்கள் அமைக்கப்பட உள்ளன.தற்போது, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், விஜயவாடா, பெங்களூரூ, ஸ்ரீநகர், ராஞ்சி, கயா, அவுரங்காபாத், லக்னோ, வாரணாசி, ஜெய்ப்பூர், நாக்பூர், கண்ணூர், கோழிக்கோடு, கொச்சி, அகமதாபாத், அகர்தலா ஆகிய நகரங்களில் இருந்து ஹஜ் குழு புறப்படுகிறது. இந்த இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுவதால், தமிழகத்தில் கூடுதலாக இனி கோவை அல்லது திருச்சியிலிருந்தும் ஹஜ் குழு புறப்பட வாய்ப்புள்ளது.

தங்கள் குடும்பத்தினரில் ஒருவர் துணையின்றி வரும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிற குழுக்களுடன் இணைத்து அனுப்பப்பட்டு வந்தனர். இனி இவர்கள் தனியாகவும் ஹஜ் யாத்திரை செல்ல வகை செய்யப்பட உள்ளது. இவர்களுடன் சேர்த்து முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்பட உள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட தம்பதிகளின் பயணத்தில் இதுவரை அவர்கள் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இனி இருவருக்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு 1.75 லட்சம் பேருக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில், 80 சதவீதம் பேர், அரசு ஹஜ் பயணிகளாகவும் மற்றவர்கள் தனியார் ஹஜ் யாத்திரை நிறுவனங்கள் மூலமாகவும் செல்லலாம். இந்தமுறை ஹஜ் யாத்திரைக்கான வைப்புத்தொகை குறைக்கப்பட்டுள்ளது. இப்பயணத்தில் படுக்கை வசதி, குடை, பைகள் உள்ளிட்ட வற்றுக்கான கட்டணங்கள் ரத்துசெய்யப்பட்டு இலவசம் ஆக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு சலுகை களால் ஒரு ஹஜ் பயணிக்கு ரூ.50,000 வரை செலவு குறையும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அனைத்து ஹஜ் பயணிகளையும் ஒன்றாக கருதி, இதுவரை ஒதுக்கப்பட்ட விஐபிஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் உள்ளடக்கிய மத்திய அரசின் புதிய கொள்கை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE