“இப்படியே சென்றால் இந்த நாடு உங்களுடன் நடக்காது” - நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி காட்டம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் திமுக சார்பாக மக்களவை திமுக குழு துணைத் தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி இன்று பங்கேற்று உரையாற்றினார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியுமான கனிமொழி தன் விரிவான உரையில் பேசியதாவது: இந்த தேசத்தின் கலை, கலாச்சாரம், தத்துவம், கட்டிடக் கலை ஆகியவற்றைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறோம். ஆனால், வரலாற்றில் இடம் இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி பேச நாம் மறந்துவிடுகிறோம்.

தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்ற கொடுமைக்கு ஆட்பட்ட மக்கள் பற்றியெல்லாம் பேச மறந்துவிடுகிறோம். பெண்களை தீயில் தள்ளிய கொடுமைகளை எல்லாம் இந்த அவையில் பெருமையாக பேசுவது அருவறுக்கத்தக்கது.

இந்த நாட்டின் கடந்த காலத்தைப் பற்றி பெருமைப்பட போதுமான காரணிகள் இருக்கின்றன. அதேநேரம் நாம் இந்த நாட்டின் கடந்த காலத்தைப் பற்றி வெட்கித் தலைகுனிவதற்குமான விஷயங்களும் இருக்கின்றன. அப்போதுதான் நாம் அவற்றில் திருத்த வேண்டியதை திருத்த முடியும், நீதி கிடைக்கப் பெறாதவர்களுக்கு நீதி வழங்க முடியும்.

ஒரே தேசம் ஒரே கட்சியை நோக்கியா?: பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் இந்த ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஒற்றைக் கலாச்சாரம்தான் என்ற கருத்தியலை உருவாக்க முயல்கிறது. ஒரே கட்சி என்பதை நோக்கித்தான் நீங்கள் செல்கிறீர்கள். அது எப்போதும் நடக்காது. இந்த தேசத்தின் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள்.

நீங்கள் மாநிலங்களின் அதிகாரங்களை தொடர்ந்து குறைத்து மதிப்பிடுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து எங்களை அவமதித்து வருகிறீர்கள். நலத்திட்டங்களைப் பற்றியும், இலவசங்களையும் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை. நாங்கள் சாதித்திருக்கிறோம், நாங்கள் நிரூபித்திருக்கிறோம். சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் முன் மாதிரியாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அதில் தோற்றிருக்கிறீர்கள்.

அன்று பேராசிரியர் சொன்னது...: துரதிர்ஷ்டவசமாக 1967-ம் ஆண்டு எங்களது மூத்த முன்னோடித் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் ராஜ்யசபாவில் பேசும்போது, ‘ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிரான கருவிகளாக மத்திய அரசால் பயன்படுத்தப்படுகிறார்கள்’ என்று பேசினார். இதை நான் சொல்லவில்லை, பேராசிரியர் சொன்னதை இங்கு நான் குறிப்பிடுகிறேன்.

இப்போதும் கூட தமிழ்நாடு ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சுமார் இருபது சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்கிறார். அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் அமைப்பு சாசனத்தில், ‘ஒரு மாநில ஆளுநர் என்பவர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மாநில அமைச்சரவையின் பரிந்துரையின்படிதான் முடிவெடுக்க முடியும்' என்று சொல்கிறது.

எனவே, பாஜக ஆளாத மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ஆளுநர்களிடம் அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சாசனத்தைக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். இந்த நாடு கூட்டாட்சியின் படி செயல்படும் நாடு என்பதை அவர்களுக்கு புரியவைக்க முயற்சி செய்யுங்கள். இதையெல்லாம் நீங்கள் கேட்க மாட்டீர்கள். இங்கே ராகுல் காந்தி பேசும்போது கூட நீங்கள் குரல் எழுப்பிக் கொண்டிருந்தீர்கள். கவனிப்பது, கற்றுக் கொள்வது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாதது.

திருவள்ளுவரும் தேர்தலும்: இந்த முறை பட்ஜெட்டில் கூட நீங்கள் திருவள்ளுவரை மறந்துவிட்டீர்கள், ஏனென்றால் இப்போது தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் எதுவும் இல்லை. அதனால் நான் உங்களுக்கு ஒரு திருக்குறளை நினைவுபடுத்துகிறேன். ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லானும் கெடும்” (இதை மொழிபெயர்கும்படி ஆளுந்தரப்பில் இருந்து கேட்டனர்.)

விமர்சனங்களை பொருட்படுத்தாத மன்னன் எதிரிகள் இல்லாமலேயே வீழ்ந்து போவான். அதாவது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாத, மக்களின் குறைகளை பொருட்படுத்தாத, பத்திரிகைகளின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாத ஒரு ஆட்சியை வீழ்த்த எதிரிகளே தேவையில்லை. அவர்களே வீழ்ந்து போவார்கள். இதைத்தான் இந்தத் திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மக்கள் சீற்றம் ஒரு நாள் வெடிக்கும்: இந்த அரசு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கருத்துரிமைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்ப்பவர்களை தனது விசாரணை ஏஜென்சிகளை கருவிகளாக பயன்படுத்தி அச்சுறுத்துகிறது. இந்த அரசு விவாதம், உரையாடல்களுக்கான தளங்களை சுருக்கிக் கொண்டிருக்கிறது.

மக்களின் குரல்களை தொடர்ந்து அடக்குவதன் மூலம் தொடர்ந்து ஆட்சியில் நீடித்துவிட முடியாது. ஆனால், இதன் மூலம் மக்களின் சோகம், துன்பம், அதிருப்தி ஆகியவை கோபமாக சீற்றமாக வெடிக்கும். அது என்றைக்கு வெளிப்படையாக எரியும் என்று உங்களுக்கே தெரியாது. பயத்தை ஏற்படுத்துவதன் மூலமாகவே உங்களால் தொடர்ந்து வெற்றி பெற முடியாது.

சர்வாதிகாரத்தை நோக்கி நாடாளுமன்றம்: குடியரசுத் தலைவர் தன் உரையில் கொள்கை முடக்குவாதத்தால் இந்தியா முன்பு பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது, அப்படி இல்லை என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் இந்தியா தற்போது கொள்கை முடிவுகளை எடுப்பதில் சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கருதுகிறேன்.

கொள்கை உருவாக்கத்தின் போது எந்த முன் ஆலோசனையும் இல்லை, நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதில்லை. சட்ட மசோதாக்களின் நகல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட முன்கூட்டியே வழங்கப்படுவதில்லை. அதனால் அந்த மசோதாக்கள் பற்றி ஆய்வு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை.

ஏனென்றால், நீங்கள் பார்லிமெண்ட் சிஸ்டத்தை விட புல்டவுசிங்கையே விரும்புகிறீர்கள். அடுத்து மிக முக்கியமான பிரச்சினை... நாடாளுமன்றம் கூடும் நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.(அப்போது அருகே இருந்த தயாநிதி மாறன் குறுக்கிட்டு அந்த நாட்களிலும் பிரதமர் அவைக்கு வருவதில்லை என்றார்)

நூறு நாள் வேலைத் திட்ட நிதிக் குறைப்பு: கரோனா காலகட்டத்தில் இந்தியா கோடிக்கணக்கான மக்களை வறுமைக்கோட்டு நிலைக்கு செல்லவிடாமல் தடுத்ததாக உலக வங்கி தனது அறிக்கையில் ஒப்புக் கொண்டிருப்பதாக குடியரசுத் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே உலக வங்கியின் அறிக்கையிலே, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் இந்தியாவில் ஏழ்மையை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் வெற்றியை இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ஆனால், கடந்த ஆண்டு 73 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் 60 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் ஏழ்மையை குறைத்துவிட்டதாக பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள். ஆனால் ஏழ்மையை ஒழிக்கும் முக்கியத் திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைக் குறைத்து விட்டீர்கள். உலக பட்டினித் தர வரிசையில் 63 ஆவது இடத்தில் இருந்த நம் நாடு இப்போது 107 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சுமார் நான்கு கோடி இந்திய இளைஞர்கள் இன்னும் வேலையின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் வளர்ச்சியா?

அதானியை எதிர்த்தால் இந்தியாவை எதிர்ப்பதா?: ஆளுங்கட்சியினர் இதையெல்லாம் திரும்பிப் பார்ப்பதே இல்லை. அவர்கள் கார்ப்பரேட் நிர்வாகக் குளறுபடிக்க்கும், அதானிக்கும் ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு தோள்கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இவ்வாறு உங்களது அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தை எதிர்த்துப் பேசினால் உங்களின் ஒரே பதில், ‘இது தேசத்துக்கு எதிரானது, இது இந்தியாவுக்கு எதிரானது’ என்பதுதான்.

அதானி நிறுவனம் பற்றி ஆய்வு அறிக்கை வெளியிட்ட அதே ஹிண்டென்பர்க் நிறுவனம் அமெரிக்கா, சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களைப் பற்றியும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த நாடுகள் எல்லாம், ‘இது எங்கள் நாட்டுக்கு எதிரானது’ என்று சொல்லவில்லை. ஆனால் அதானிக்கு எதிராகப் பேசினால் அது தேசத்துக்கு எதிராக பேசுவதாக நீங்கள் சித்திரிக்கிறீர்கள்.

எல்ஐசியில் பணம் போட்டவர்களின் எதிர்காலம் என்ன?: எல்ஐசியில் பணம் போட்டால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பத்திரமாக இருக்கும் என்று அவர்கள் நம்பியிருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் என்ன? உழைப்பை நம்பியே இருக்கும் நம் நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் கொடுக்கும் மதிப்பு இதுதானா? பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்பதில்தான் இந்த அரசுக்கு ஆர்வம் அதிகம் இருக்கிறது.

பெண் இட ஒதுக்கீடு மசோதா நிலை என்ன?: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் இந்த அரசாங்கத்தின் நிலை என்ன? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்கள். நாடாளுமன்றத்தில் 27 கூட்டத் தொடர்கள் நடந்தும், பெண்கள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் எதுவும் நடக்கவில்லை.

பழங்குடியினர் நலத்தைப் பற்றி பேசுகிறீர்கள். கிரேட்டர் நிகோபர் தீவுகளில் உள்கட்டமைப்புத் திட்டம் என்ற பெயரில் பழங்குடியினருக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? யாருக்காக அதை செய்கிறீர்கள் என்று தெரியும்.(அதானி அதானி எனக் எதிர்கட்சியினர் குரல்கள்) பழங்குடியின மக்களின் வாழ்வியலை மாற்றப் போகிறோம் என்று ஆளுநர் சொல்கிறார்.

அந்த மக்களோ எங்களை எங்கள் வாழ்வை வாழ விடுங்கள், எங்கள் கலாச்சாரத்தை பின்பற்ற விடுங்கள், எங்கள் வணிகத்தை செய்யவிடுங்கள் என்கிறார்கள். அதை அரசு கேட்கவில்லை. இதுதான் நீங்கள் பேசும் பழங்குடியினர் நலமா?

தமிழுக்கான நிதி ஒதுக்கீடு: பிரதமர் மோடி தமிழ் மொழியின் உன்னதத்தைப் பற்றி அவ்வப்போது பேசுகிறார். ஆனால், நிதி ஒதுக்கீடு என்று வரும்போது மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்துக்கு ரூ.198.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மத்திய செம்மொழி ஆய்வு மையத்துக்கு ரூ.11.86 கோடிதான் ஒதுக்கப்படுகிறது. இந்த பணம் நிர்வாக செலவுகளுக்கே போதாது. அப்புறம் எங்கே ஆய்வு நடத்துவது? நிகழ்ச்சிகள் நடத்துவது? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சம்ஸ்கிருதம் கட்டாயம். ஆனால் மாநில மொழிகளின் நிலை என்ன?

தமிழ்நாட்டில் கீழடியில் நடந்துள்ள ஆராய்ச்சி முடிவுகளின்படி கி.மு. 600க்கும் முற்பட்ட சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றை வெளியிடுவதில் கூட இந்த அரசு ஆர்வம் காட்டவில்லை. நிதியமைச்சர் எங்கள் ஆதிச்சநல்லூர் அகழாய்வுத் தளத்திலேயே அருங்காட்சியகம் மூன்று வருடங்களுக்கு முன்பே அமைக்கப்படும் என அறிவித்தது இன்னும் நடக்கவில்லை.

தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நான்கு வருடங்களுக்கு முன் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின் எந்த வேலையும் நடக்கவில்லை, NIPER எனப்படும் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் அமைய 13 ஆண்டுகளுக்கு முன்பு 116 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு இலவசமாக கொடுத்தது. ஆனால் இன்னமும் அத்திட்டத்துக்காக காத்திருக்கிறோம்.

நீட் தேர்வு: நீட் தேர்வு என்பது நேஷனல் எலிமினேட்டிங் அண்ட் எராடிகேட்டிங் டெஸ்ட் ஆக மாறிவிட்டது. நீட் தேர்வு வந்தால் மருத்துவக் கல்லூரி கட்டணங்கள் முறைப்படுத்தப்படும் என்று சொன்னார்கள். ஆனால், அதுவும் நடக்கவில்லை. சிறுபான்மையினருக்கான ஸ்காலர்ஷிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. ரயில்வேயில் வட இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டவற்றில் பத்தில் ஒரு பங்கு திட்டம் கூட தமிழ்நாட்டுக்கு இல்லை. இப்படி நீங்கள் தொடர்ந்து எங்களை அவமதித்தால், புறக்கணித்தால் நாங்கள் உங்களோடு இணைந்து நடக்க முடியாது. இந்த நாட்டு மக்கள் உங்களோடு இணைந்து நடக்க மாட்டார்கள்.

இவ்வாறு விரிவாக அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்