தமிழகத்தின் மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை - மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தமிழகத்திலுள்ள மத்திய அரசின் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை இன்று மக்களவையில் திமுக எம்பியான தமிழச்சி தங்கபாண்டியன் விதி எண் 377 இன் கீழ் வலியுறுத்தினார்.

இதன்மீது இன்று நாடாளுமன்றத்தில் தென்சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரியது பின்வருமாறு: இந்தியா போன்ற ஒரு நாட்டில், அனைத்து பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே சிறந்த சேவை வழங்கலை உறுதி செய்ய முடியும்.

அரசாங்க பணிகளில் பிராந்திய பிரதிநிதித்துவம் தர வேண்டும். மைய நிர்வாகம், நல்லாட்சியின் தோழியாக இருக்க முடியாது. பொது மக்களுடன் எளிதான அணுகல் தேவைப்படுகிறது. உள்ளூர் மொழி மற்றும் கலாச்சாரத்தை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டில் ஒப்பீட்டளவில் அதிக அறிவு மற்றும் திறன் கொண்ட மனித வளம் உள்ளது. அது பெரும்பாலும் பயன்படுத்தப்படாமலே போகிறது.

பணியாளர் தேர்வு ஆணையத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் வெறும் 4.5 சதவீதம் மட்டுமே தமிழர்கள் என தெளிவாகக் குறிப்பிடுகிறது. இதேபோல், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் கடந்த ஆண்டு தென் மண்டலத்தில் நடத்திய தேர்வுகளில், தேர்வானவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. இந்த கோணலான ஆட்சேர்ப்பு முறையானது சமூக-அரசியல் வட்டாரங்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களிடையே தாக்கங்களை ஏற்படுத்தும்.

எனவே இது தவிர்க்கப்பட வேண்டும். தமிழ் மொழியில் தேர்வுகளை நடத்துவது, தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்கள், தமிழகத்தில் அமைந்துள்ள ரயில்வே நிறுவனங்களில் 'ஆக்ட் அப்ரண்டிஸ்' உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன.

இவற்றில், 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நேரடி பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். இவற்றில், மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE