கர்நாடகாவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

துமகூரு: ஆசியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை கர்நாடகாவின் துமகூரு பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

ஆசியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை கர்நாடகாவின் துமகூரு பகுதியில் அமைப்பதற்கான அடிக்கல் கடந்த 2016-ம் ஆண்டு நாட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி உரை: ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரை: ''இந்த தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் வாய்ப்பு கடந்த 2016-ம் ஆண்டு எனக்கு கிடைத்தது. அப்போது ஒரு உறுதியுடன் அடிக்கல் நாட்டினேன். நாம் நமது பாதுகாப்புக்கு பிற நாடுகளைச் சார்ந்திருக்கக்கூடாது என்பதே அந்த உறுதி. நமது ராணுவத்துக்குத் தேவையானவற்றை முடிந்த அளவு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான முயற்சிதான் இந்த தொழிற்சாலை. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தால் அது எந்த அளவு திறனுடன் செயலாற்றும் என்பதற்கு இந்த தொழிற்சாலை ஒரு உதாரணம்.

திறமையும் புதுமையும் நிறைந்த இளைஞர்களைக் கொண்ட மாநிலம் கர்நாடகா. ஆளில்லா விமானம் முதல் தேஜாஸ் போர் விமானம் வரை கர்நாடகாவின் உற்பத்தித் திறனை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக கர்நாடகா இருப்பதற்கு டபுள் இன்ஜின் அரசு (மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக அரசு) இருப்பதுதான் காரணம்'' என தெரிவித்தார்.

தொழிற்சாலையின் சிறப்பு: ஆசியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையான இங்கு முதலில் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான எடை குறைந்த ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும் என்றும், அதன் பிறகு போரில் ஈடுபடக்கூடிய எடை குறைந்த ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்கள் எதிர்காலத்தில் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொழிற்சாலை 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE