ஐந்து நீதிபதிகள் பதவியேற்பு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக 5 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (திங்கள்கிழமை) பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக, சனிக்கிழமை (பிப்.3) உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று 5 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியிருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி, உச்ச நீதிமன்ற கொலீஜியம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதின் அமானுல்லா, அகலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த பரிந்துரை கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் ஏற்படும் தாமதம் குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை, நீதிபதிகள் கவுல் மற்றும் ஏ.எஸ் ஒகா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றார்.

அப்போது, கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமனம் செய்வதில் மத்திய அரசின் தாமதம் குறித்து அதிருப்தியை வெளியப்படுத்திய நீதிபதிகள் அமர்வு, இது மிகவும் முக்கியமான பிரச்சினை. மிகவும் சங்கடமான நிலைப்பாட்டை எடுக்க எங்களை நிர்பந்திக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.

இந்தநிலையில், கொலீஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று (பிப்.6) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி உட்பட உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க வேண்டும். முன்னதாக 27 நீதிபதிகளே இருந்தனர். தற்போது ஐந்து பேர் புதிய நீதிபதிகளாக பதவி ஏற்றிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE