மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள் - 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பலன் தருமா?

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாட்டின் 75-வது பொது பட்ஜெட்நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியின் கடைசி முழுமையான பட்ஜெட் இது.

இந்த ஆண்டு நடைபெறும் 9 மாநில தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பல்வேறு நல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதிலும் மீண்டும் எதிர்பார்க்கப்படும் பொருளாதார சரிவை சமாளிக்கும் வகையில் இவை அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடியின் கடந்த ஆட்சி முதல் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்சவரம்பு உயர்வு, இந்தமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டு நூறு சதவீதம் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ரூ.2.5 லட்சம் வரையிலான வரி விதிப்பின் உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்ந்துள்ளது. இது பாஜகவுக்கு மக்களவைத் தேர்தலில் பலனளிக்க வாய்ப்புள்ளது.

அடுத்த முக்கிய அறிவிப்பு, ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தில் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.48,000 கோடி என்றிருந்த இந்த திட்டத்துக்கான ஒதுக்கீடு, சுமார் 66 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை போலவே, ஏழைகளை மனதில் வைத்து இலவச ரேஷன் பொருள் விநியோகம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்காக சுமார் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை சமாளிக்க. கடன் அட்டை மூலம் இந்த ஆண்டு ரூ.20 லட்சம் கோடி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான அனைத்து தகவல்களையும் பகிர்வதற்காக ‘விவசாயிகள் டிஜிட்டல் தகவல் பொதுமேடை’ உருவாக உள்ளது.

விவசாயிகளுக்கான அரசுத் திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பெரும்பாலான விவசாயிகளை திருப்திபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும் பிரச்சினையாக அச்சுறுத்தி வரும் வேலை வாய்ப்பின்மையை போக்கவும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது. தேசிய திறன் பயிற்சி நிலையங்கள் 30 அமைத்து அதில் இளைஞர்களுக்கு சர்வதேச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி அளிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையால், சுயதொழில் வேலைவாய்ப்பும் பெருக வாய்ப்புள்ளது. இத்துடன், சுமார் 47 லட்சம் இளைஞர்களுக்கான தேசிய அப்ரன்டிஸ் திட்டத்தில் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு சுமார் ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தலை மனதில் வைத்து அங்கு அதிகமுள்ள பழங்குடிகளுக்காக புதிய நலத்திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இதுபோல், மேலும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறுவதற்காக மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து சமர்ப்பித்த பட்ஜெட்டாக இது உள்ளது.

உதாரணமாக, ஜாமீன் கிடைத்தும் ஜாமீன் தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் தவிக்கும் ஏழை கைதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டமும் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. மகளிருக்கு சலுகை, முதியோர் வைப்பு நிதி உச்சவரம்பை 100 சதவீதம் அதிகரிப்பதுடன் கூட்டுறவுத் துறை வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், பாஜகவின் இந்துத்துவா கொள்கையில் சிக்கியுள்ள சிறுபான்மையின ருக்கான துறையின் ஒதுக்கீடு மிக அதிகமாகக் குறைந்துள்ளது. இதனால் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை அளிக்கும்மவுலானா ஆசாத் கல்வி அமைப்புமூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு குடிமைப்பணி தேர்வுக்கான உதவித்தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடியாக நிதி குறைக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த சட்டப்பேரவை தேர்தல் சிலவற்றில் பாஜகவுக்கு ஏற்பட்ட இழப்பை இந்த பட்ஜெட் சமாளிக்கும் என அக்கட்சியினர் கருதுகின்றனர்.

மக்களவை தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் முழுப்பலனை இந்த பட்ஜெட், பாஜகவிற்கு கிடைக்க செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE