இரு தொகுதிகளில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் கடந்த 2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

அதில், “ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடும் போது இரண்டிலும் அவர் வெற்றிபெற்றுவிட்டால் ஒரு தொகுதியில் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டியிருக்கும். இதனால் மக்களின் வரி பணமும் அதிகாரிகளின் நேரமும் வீணாகிறது. எனவே இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 33(7)-வது பிரிவை செல்லாததாக அறிவிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பர்திவாலா அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது:

பல்வேறு காரணங்களால் ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இது நாடாளு மன்றம் சார்ந்த விவகாரம். ஜன நாயக நாடான இந்தியாவில் இத்தகைய விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில்தான் முடிவெடுக்க வேண்டும்.

கடந்த 1996-ம் ஆண்டுக்கு முன்பு ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை இருந்தது. இதை தடுக்க 1996-ல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். இதேபோல இப்போதும் நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட சட்டப்பிரிவை நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE