முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண் மறைவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷண்(97) நேற்று காலமானார்.

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றிய சாந்தி பூஷண் காங்கிரஸ் கட்சியிலும், ஜனதா கட்சியிலும் தீவிர உறுப்பினராக இருந்தார். கடந்த 1977-ம் ஆண்டு முதல் 1979-ம் ஆண்டு வரை மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக பணியாற்றினார். இவர் சட்ட அமைச்சராக இருந்தபோதுதான், அரசியல் சாசனத்தின் 44வது திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞராக பணியாற்றியபோதும், அமைச்சராக பணியாற்றியபோதும் அவர் எப்போதும் உண்மைக்காக துணை நின்றார். நீதித்துறையின் பொறுப்பு மற்றும் வெளிப்படைத் தன்மைக்காக இவரும், இவரது மகன் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் போராடினர். கடந்த 1980-ம் ஆண்டு அவர் பாஜக.,வில் சேர்ந்தார். 6 ஆண்டுகளுக்குப்பின் அவர் அக்கட்சியிலிருந்து விலகினார். ஆம் ஆத்மி கட்சியில் நிறுவன உறுப்பினரமாகவும் இவர் இருந்தார்.

சில காலமாக உடல்நிலை குன்றியிருந்த சாந்தி பூஷண் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நேற்று மறைந்தார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘நீதித்துறையில் சாந்தி பூஷண் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவு கூரப்படும்’’ என குறிப்பிட்டுள்ளார். சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவும், சாந்தி பூஷண் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE