புதுடெல்லி: புதிய வரி விதிப்பு நடைமுறையில் தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைநிலை மக்களுக்கும் அரசு திட்டங்கள் சென்றடைவது, உள்கட்டமைப்பு - முதலீட்டை அதிகரிப்பது, ஆதாரங்கள் - வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது, பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி, நிதி சேவை ஆகிய 7 முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏழைகள், நடுத்தர மக்களுக்கு பலன் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 8 ஆண்டுகளுக்கு பிறகு, வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் தனிநபர் வருமான வரி குறித்து பட்ஜெட்டில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். இது, கடினமாக உழைக்கும் நடுத்தர மக்களுக்கு பலன் தரும்.
முதல் அறிவிப்பு: தனிநபர் வருமான வரி விதிப்பில் பழைய முறை, புதிய முறை என 2 நடைமுறைகள் உள்ளன. இரு நடைமுறைகளிலும் ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது. இந்த பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பு முறையில் வருமான வரிச் சலுகை வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
2-வது அறிவிப்பு: புதிய வரி விதிப்புமுறையில் 6 விதமான வரி விகிதங்கள் உள்ளன. அது தற்போது 5 ஆக குறைக்கப்படுகிறது. மேலும், புதிய வரி விதிப்புமுறையில், தனிநபர் வருமான வரி விலக்குஉச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
இதன்படி, ரூ.3 லட்சம் வரை வரி கிடையாது. ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5 சதவீதம், ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
இதன்படி, ஒருவர் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வருவாய் ஈட்டினால் அவர் ரூ.45,000 வரி செலுத்த வேண்டும். இதற்கு முன்பு இதே வருமான வரம்புக்கு ரூ.60,000 வரிசெலுத்த வேண்டி இருந்தது. தற்போதுவரி விகிதம் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டினால் அவர் ரூ.1.5 லட்சம் வருமான வரி செலுத்த வேண்டும். இதற்கு முன்பு இதே வருமான வரம்புக்கு ரூ.1,87,500 வரி விதிக்கப்பட்டது. தற்போது 20 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.
3-வது அறிவிப்பு: ஊதியதாரர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு புதிய வரி விதிப்பு முறையில் அடிப்படை விலக்கு வழங்கப்படும். இதன்படி ஆண்டுக்கு ரூ.15.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருவாய் ஈட்டும் ஊதியதாரர்கள் ரூ.52,000 வரை சலுகை பெற முடியும்.
4-வது அறிவிப்பு: அதிக வருவாய் ஈட்டுவோருக்கு 42.74 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது. இது உலகின் மிக அதிக வருமான வரி விகிதங்களில் ஒன்றாகும். இதை கருத்தில் கொண்டு, புதிய வருமான வரி விதிப்பில், அதிக வருவாய் ஈட்டுவோருக்கான கூடுதல் கட்டண விகிதம் 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன்மூலம் அதிகபட்ச வரி விகிதம் 42.74 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக குறைகிறது.
5-வது அறிவிப்பு: அரசு சாரா ஊழியர்களின் பணி ஓய்வுக்கான ஈட்டிய விடுப்பு2002-ம் ஆண்டில் ரூ.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வரம்பு இப்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
புதிய வரி விதிப்பை பிரதான நடைமுறையாக பின்பற்ற திட்டமிட்டுள்ளோம். எனினும், பழைய முறையை விரும்புவோர் அதே நடைமுறையில் வரி செலுத்தலாம்.
வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையை நிறைவு செய்வதற்கான காலம் 93 நாட்களில் இருந்து 16 நாட்களாக குறைக்கப்படும். நவீன வருமான வரி கணக்கு விண்ணப்ப படிவங்கள் அறிமுகம் செய்யப்படும். வருமான வரி குறைதீர்வு நடைமுறைகள் வலுப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு, புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு மட்டுமே பொருந்தும். பழைய வரி விதிப்பு நடைமுறையில் வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை.
இதுகுறித்து மூத்த ஆடிட்டர்கள் கூறியபோது, ‘‘வருமான வரி தாக்கலின்போது புதிய நடைமுறையா, பழைய நடைமுறையா என்பதை கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தாமாகவே புதிய வரிவிதிப்பு நடைமுறை கணக்கில் கொள்ளப்படும்’’ என்றனர்.
முக்கிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள்:
> ராணுவ துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கீடு
> போக்குவரத்து, நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2.7 லட்சம் கோடி
> ரயில்வே துறைக்கு ரூ.2.41 லட்சம் கோடி ஒதுக்கீடு
> விவசாயிகள் நலனுக்கு ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கீடு
> தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.1.23 லட்சம் கோடி ஒதுக்கீடு
> ரூ.20 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்க இலக்கு
> சிறுதானிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும்
> 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகே 157 நர்ஸிங் கல்லூரிகள்
> வேலைவாய்ப்பை அதிகரிக்க மூலதன செலவுக்கு ரூ.10 லட்சம் கோடி
> 50 புதிய விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள்
> 80 கோடி குடும்பத்துக்கு ரேஷனில் இலவச உணவு, தானியம்
> தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்
> ரூ.7,000 கோடி செலவில் இ-நீதிமன்றங்கள் திட்டம்
> 5ஜி சேவை ஆய்வுக்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்
> ரூ.19,700 கோடியில் தேசிய ஹைட்ரஜன் திட்டம்
> இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 10,000 ஆய்வகங்கள்
> மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago