“நாட்டில் நிகழும் மாற்றங்களை விளக்கியது குடியரசுத் தலைவரின் உரை” - பிரதமர் மோடி கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் பல்வேறு துறைகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து விளக்கும் வகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரை இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கியது. இதை முன்னிட்டு நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், அரசின் திட்டங்கள் குறித்தும், அதனால் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். வளர்ந்த நாடாக இந்தியா மாற அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டு மக்கள் கடமையில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ''நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை, பல்வேறு துறைகளில் நிகழும் மாற்றங்கள் குறித்த ஆழமான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. சாதாரண மக்கள் எவ்வாறு அதிகாரம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்தும் அவர்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு மேம்பட்டுள்ளது என்பது குறித்தும் குடியரசுத் தலைவர் எடுத்துரைத்தார்'' என தெரிவித்துள்ளார்.

திரவுபதி முர்முவின் உரை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ''குடியரசுத் தலைவரின் துவக்க உரை நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் பெருமிதத்தையும் ஊக்கத்தையும் தரக்கூடியதாக இருந்தது'' என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE