புதுடெல்லி: தமிழ்நாட்டின் உத்திரமேரூரில் உள்ள 1,200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு, உலகத்தையே வியக்க வைக்கிறது. இந்த கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் கடந்த 2014 அக்டோபர் முதல் ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், 2023-ம் ஆண்டின் முதல் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 74-வது குடியரசு தின விழா கொண்டாட்டம், பத்மஸ்ரீ விருதுகள், உலகளாவிய கண்டுபிடிப்பு பட்டியலில் இந்தியாவின் நிலை, சிறுதானியங்களின் சர்வதேச ஆண்டை ஐ.நா.அங்கீகரித்தது, எலெக்ட்ரானிக் கழிவுகள், ஈரநிலங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
பழங்குடியினருக்கும், அவர்களது வாழ்க்கையோடு தொடர்புடைய நபர்களுக்கும் இந்த முறை பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பழங்குடியினரின் வாழ்க்கை, நகர வாழ்க்கையில் இருந்து வேறுபட்டது. சவால்கள் மிக்கது. இதைதாண்டி, பழங்குடியினர் தங்கள் பாரம்பரியங்களை பாதுகாப்பதில் எப்போதுமே முனைப்பாக இருக்கின்றனர்.
பழங்குடி சமூகங்களோடு இணைந்த விஷயங்களை பாதுகாக்கவும், அதுபற்றி ஆய்வுகள் மேற்கொள்ளவும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டோடோ, ஹோ, குயி, குவி, மாண்டாபோன்ற பழங்குடி மொழிகள் தொடர்பான பணியில் ஈடுபட்டு வருவோருக்கும் பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன. சித்தி, ஜார்வா, ஓங்கே போன்ற பழங்குடியினரோடு இணைந்து பணியாற்றியவர்களும் இந்த முறை கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
நக்சல் பாதிப்பு பகுதிகளில் தடம்மாறிப் போன இளைஞர்களுக்கு சரியான வழியைக் காட்டி உதவியவர்களுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வட கிழக்கில் தங்கள் கலாச்சாரத்தை பாதுகாக்க பணியாற்றியவர்களுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
‘தொழில்நுட்ப தசாப்தம்’ என்றஇந்தியாவின் கனவு, நமது கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அவர்களது காப்புரிமைகளால் நிறைவேற்றப்படும்.
இந்தியாவின் அறிவியல் திறன் அதிகரித்து வருகிறது. உள்நாட்டு காப்புரிமை தாக்கல்கள், வெளிநாட்டு காப்புரிமை தாக்கல்களை மிஞ்சிவிட்டன. உலக அளவில் காப்புரிமை தாக்கலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.
டிரேடுமார்க் பதிவில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் காப்புரிமை பதிவு, கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2015-ல் உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு பட்டியலில் இந்தியா 80-வது இடத்துக்கும் கீழ் இருந்தது. தற்போது 40-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
‘இந்தியா - ஜனநாயகத்தின் தாய்’என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தகம் சமீபத்தில் எனக்கு கிடைத்தது, இதில்பல சிறப்பான கட்டுரைகள் உள்ளன. ஜனநாயகத்தின் தாயாக நமது நாடு விளங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.
ஜனநாயகம் என்பது நம் நாடிநரம்புகளில் கலந்திருக்கிறது. நமதுகலாச்சாரத்தில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக இது நமது செயல்பாட்டின் பிரிக்கமுடியாத அங்கமாகவே உள்ளது. இயல்பாகவே நாம் ஒரு ஜனநாயக சமூகம்தான்.
புத்த பிட்சுக்கள் சங்கத்தை, டாக்டர் அம்பேத்கர் இந்திய நாடாளுமன்றத்தோடு ஒப்பிட்டார். கோரிக்கைகள், தீர்மானங்கள், ‘கோரம்’ என்ற குறைந்தபட்ச ஆதரவு எண்ணிக்கை, வாக்களித்தல் தொடர்பாக பல விதிமுறைகள் அதிலும் இருக்கின்றன. பகவான் புத்தருக்கு இதற்கான கருத்துகள், அவர் காலத்திய அரசியல் முறைகளில் இருந்துகிடைத்திருக்க வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார்.
தமிழ்நாட்டின் உத்திரமேரூரில் உள்ள 1100-1200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு, உலகத்தையே வியக்க வைக்கிறது.
இந்த கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது. கிராமசபை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், அதன் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் செயல்முறை என்ன என்பதுபற்றியெல்லாம் அந்த கல்வெட்டில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
12-ம் நூற்றாண்டை சேர்ந்த பசவேஸ்வரரின் அனுபவ மண்டபத்தில், சுதந்திரமான விவாதங்கள், கலந்துரையாடல்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வாரங்கல்லை சேர்ந்த காகதீய வம்சத்து அரசர்களின் ஜனநாயக பாரம்பரியங்கள் மிகவும் புகழ்பெற்றவை. பக்தி இயக்கமானது, இந்தியாவின் மேற்கு பகுதியில், ஜனநாயக கலாச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றது.
இந்த புத்தகத்தில், சீக்கிய சமயத்தின் ஜனநாயக உணர்வு பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது. குருநானக் தேவ்,அனைவரது சம்மதத்தோடு மேற்கொண்ட தீர்மானங்கள் பற்றியும் நாம் இதன்மூலம் அறியமுடிகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago