சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக்கில் 135 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை

By செய்திப்பிரிவு

லடாக்: சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையில் 135 கி.மீ.தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

ஆரம்ப காலத்தில் லடாக் எல்லையில் முகாமிட்டிருந்த வீரர்களுக்கு கழுதைகள் மூலமாக உணவு, ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது எல்லைப் பகுதிக்கு செல்ல சாலை வசதி கிடையாது. 1980-களில் எல்லைப் பகுதியை அடைய 12 முதல் 15 நாட்களாகின. இப்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் லடாக்கின் காராகோரத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரையிலான 3,488 கி.மீ. எல்லைப் பகுதிகளில் ரூ.15,477 கோடி செலவில் 2,088 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீன ராணுவம் அடிக்கடி அத்துமீற முயற்சிக்கும் லடாக் பகுதியில் சாலை உள்கட்டமைப்பு பன்மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. இதன்பிறகு லடாக் எல்லையில் சாலை உள்கட்டமைப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

கடந்த 2021-ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் புதிய பாலம் திறக்கப்பட்டது. இப்போது 24 மணிநேரத்தில் லடாக் எல்லை பகுதியை சென்றடைய முடிகிறது.

அதோடு லடாக் எல்லையில் புதிதாக 37 ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக 4 விமான தளங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் லடாக்கின் டெம்சாக் பகுதியில் இருந்து சூசோல் பகுதியில் அமைந்துள்ள பான்காங் ஏரி வரை 135 கி.மீ.தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக எல்லை சாலை அமைப்பு அண்மையில் ஒப்பந்தம் கோரியது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

பான்காங் ஏரியுடன் இணைப்பு

இதுகுறித்து எல்லை சாலைஅமைப்பு வட்டாரங்கள் கூறியதாவது. லடாக் எல்லையில் மக்கள் வசிக்கும் கடைசி கிராமம் டெம்சாக். இது கடல் மட்டத்தில் இருந்து 19,000 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த கிராமத்துக்கு பிறகு எல்லைக்கோடு வரை மக்கள் குடியிருப்பு கிடையாது. இந்த எல்லைப் பகுதியில் சாலை வசதி திருப்திகரமாக இல்லை.

இதை கருத்தில் கொண்டு டெம்சாக்கில் இருந்து தென்கிழக்கு லடாக் பகுதியான சூசோல் வரை 135 கி.மீ. தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை பான்காங் ஏரியின் தென்பகுதியை இணைக்கும். ஏரியின் ஒரு பாதி இந்தியாவிடமும் மற்றொரு பாதி சீனாவிடமும் உள்ளது.

பான்காங் ஏரி மற்றும் அதை ஒட்டிய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீற முயற்சிப்பதும் அவர்களை இந்திய வீரர்கள் விரட்டியடிப்பதும் வாடிக்கையாக உள்ளது. சீன ராணுவம் தனது எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. அந்த நாட்டைவிட இருமடங்கு அதிகமாக இந்திய பகுதிகளில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது ரூ.400 கோடி செலவில் புதிதாக அமைக்கப்படும் டெம்சாக் - சூசோல் இடையிலான 135 கி.மீ. நெடுஞ்சாலை சிந்து நதியை ஒட்டி அமைக்கப்படும். இது சாங்தாங் வனவிலங்கு சரணாலயத்தை கடந்து செல்லும்.

மிக குறுகிய காலத்தில் சாலை பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதன்படி அடுத்த 2 ஆண்டுகளில் புதிய நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வரும். இதன்பிறகு பான்காங் ஏரிப்பகுதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் எளிதில் சென்றடைய முடியும். இவ்வாறு எல்லை சாலை அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்