கர்நாடகாவில் பதான் படத்துக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய 35 பேர் கைது

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பாலிவுட் நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடித்த பதான் திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடலில் தீபிகா படுகோனே காவி நிற உடை அணிந்து நடனம் ஆடியதால் அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் மங்களூரு, பெலகாவி, கல்புர்கி ஆகிய இடங்களில் பதான் படத்தை திரையிட்ட திரையரங்குகளை இந்துத்துவ அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மங்களூருவில் பஜ்ரங்தள அமைப்பினர் பாரத் திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர், பேனர் ஆகியவற்றை கிழித்து எறிந்தனர். கல்புர்கியில் சுவாகத் திரையரங்கம் முன்பாக திரண்ட இந்துத்துவ அமைப்பினர் கற்களை வீசியதால் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக கல்புர்கி போலீஸார் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பெலகாவி தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ அபய் பாட்டீல், ‘‘பெலகாவியில் பதான் படம் திரையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிடில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது''என எச்சரித்தார். இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் திரண்டு திரையரங்கை முற்றுகையிட்டு போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் திரையரங்கின் நுழைவாயில், முகப்பு கண்ணாடி, நாற்காலிகளை சேதப்படுத்தினர். இதையடுத்து, 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE