‘அனைவரின் நிலையையும் உயர்த்துதல்’ என்பது இன்னும் எஞ்சி இருக்கிறது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "பாபாசாஹேப் அம்பேத்கரும் பிறரும், நமக்கு ஒரு வரைபடத்தையும், தார்மிகக் கட்டமைப்பையும் அளித்தாலும், அந்தப் பாதையில் பயணிப்பது என்பது நமது பொறுப்பாக இருந்தது. நாம் பெரும்பாலும் அவர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மெய்யானவர்களாகவே நடந்திருக்கும் அதே வேளையில், காந்தியடிகளின் ஆதர்சமான சர்வோதயம் என்ற அனைவரின் நிலையையும் உயர்த்தல் என்பது நிறைவேற்றப்படாமல் இன்னும் எஞ்சி இருக்கிறது என்பதையும் நான் உணர்ந்திருக்கிறோம். இருந்தாலும், அனைத்து முனைகளிலும் நாம் கண்டிருக்கும் முன்னேற்றம் ஊக்கமளிப்பதாக இருக்கிறது” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: "74-வது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் தொடங்கி தற்போது வரை, பல நாடுகளுக்கு உத்வேகம் அளித்திருக்கும் ஒரு ஆச்சரியமான பயணமாகவே இது இருந்திருக்கிறது. இந்த இந்தியக் கதை ஒவ்வொரு இந்தியரின் பெருமைக்கும் காரணமாக அமைகிறது. குடியரசுத் திருநாளை நாம் கொண்டாடும் வேளையில், ஒரு நாடு என்ற வகையில் நாம் சாதித்திருப்பவற்றை நாம் கொண்டாடுகிறோம்.

இந்தியா மிகத் தொன்மையான, வாழும் நாகரீகங்களின் இருப்பிடமாக இருக்கிறது. இந்தியா ஜனநாயகத்தின் தாயகம். ஒரு நவீனக் குடியரசு என்ற முறையில், நாம் இளமைத்தன்மை கொண்டவர்கள் தாம். சுதந்திரத்தின் தொடக்கக்காலத்தில் நாம் கணக்கற்ற சவால்களையும், இடர்களையும் சந்தித்தோம். நீண்டகால அந்நிய ஆட்சியின் பல தீய விளைவுகளில், உச்சபட்ச ஏழ்மையும், கல்வியறிவின்மையும் இரண்டு விளைவுகள் மாத்திரமே. இருந்த போதிலும் இந்தியா என்ற உணர்வு கலங்கவில்லை.

நம்பிக்கையும், உறுதிப்பாடும் துணைக்கொண்டு, நாம் மனிதகுல வரலாற்றின் மிகத் தனித்தன்மை வாய்ந்த ஒரு பரிசோதனையில் ஈடுபட்டோம். இத்தனை பெரிய, பல்வகைப்பட்ட பேரெண்ணிக்கை கொண்ட மக்கள், ஓரு நாடாக இருப்பது என்பது வரலாறு காணாதது. இதை நாம் செய்தமைக்கு, நாம் அனைவரும் ஒன்று, நாம் அனைவரும் இந்தியரே என்ற நம்பிக்கை மட்டுமே காரணம். பல்வேறு மொழிகளும், பிரிவுகளும் நம்மை பிரிக்கவில்லை, நம்மை ஒன்றிணைக்கவே செய்திருக்கின்றன என்பதன் காரணமாகவே நம்மால் ஒரு ஜனநாயகக் குடியரசாக வெற்றி பெற முடிந்திருக்கிறது. இது தான் இந்தியாவின் சாராம்சம்.

இந்த மையக்கரு தான் அரசியலமைப்புச் சட்டத்தின் இதயமாக இருந்து, காலத்தின் சோதனைகளைத் தாக்குப் பிடித்திருக்கிறது. குடியரசின் வாழ்க்கையை இயக்கத் தொடங்கிய அரசியலமைப்புச் சட்டம் தான் விடுதலைப் போராட்டத்தின் வெளிப்பாடு. காந்தியடிகள் வழிநடத்திய தேசிய இயக்கத்தின் நோக்கம் சுதந்திரத்தை வென்றெடுப்பது என்றாலும், நமக்கான ஆதர்சங்களை மீள்கண்டுபிடிப்பு செய்வதும் கூட இதன் நோக்கங்களில் ஒன்று.

காலனியாதிக்கத்திலிருந்தும் சரி, திணிக்கப்பட்ட விழுமியங்கள், குறுகிய உலகப் பார்வைகள் போன்றவற்றிலிருந்தும் சரி, விடுதலை பெற்றுத் தருவதில், பல தசாப்தப் போராட்டமும் தியாகமும் நமக்கு உதவியிருக்கின்றன. புரட்சியாளர்களும், சீர்திருத்தவாதிகளும், தொலைநோக்குச் சிந்தனையாளர்களோடும், ஆதர்சவாதிகளோடும் கைகோர்த்து, நமது பண்டைய நற்பண்புகளான அமைதி, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றைக் கற்க நமக்கு உதவியிருக்கிறார்கள். நவீன இந்திய மனதை உருவாக்கியவர்கள், ஆனோ பத்ரா: க்ரதவோ யந்து விஸ்வத:, Let noble thoughts come to us from all directions என்ற வேதக்கூற்றுப்படி, அயல்நாடுகளிலிருந்தும் முற்போக்குக் கருத்துக்களை வரவேற்றார்கள். ஒரு நீண்ட, ஆழமான எண்ணச் செயல்பாடு, நமது அரசியலமைப்புச் சட்டமாக வடிவம் பெற்றது.

உலகின் மிகத் தொன்மையான, வாழும் நாகரீகத்தின் மனிதநேய தத்துவத்தாலும், அண்மைக்கால சரித்திரத்தில் உருவான புதிய கருத்துக்களாலும் கருத்தூக்கம் பெற்றது தான் நமது அடிப்படை ஆவணம். அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுவின் தலைவராக இருந்தபடியால், இறுதி வடிவம் கொடுக்கும் முக்கியமான பங்கு வகித்த டாக்டர். பி. ஆர். அம்பேத்கருக்கு தேசம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும். இந்த நாளன்று, தொடக்கக்கட்ட வரைவை உருவாக்கிய சட்டவல்லுனர் பி.என். ராவ் அவர்களின் பங்களிப்பையும், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் உதவிய பிற வல்லுனர்களையும், அதிகாரிகளையும் நாம் நினைவுகூர வேண்டும். அந்தச் சபையின் உறுப்பினர்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகள், பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், இதில் 15 பெண் உறுப்பினர்களும் இருந்தார்கள் என்பது நமக்குப் பெருமிதம் அளிக்கும் விஷயம்.

அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய தொலைநோக்கு நமது குடியரசைத் தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. இந்தக் காலகட்டத்தில், பெரும்பாலும் ஒரு ஏழை-கல்வியறிவில்லாத நாடு என்ற நிலையிலிருந்து மாறி, உலக அரங்கிலே தன்னம்பிக்கையோடு நடைபோடும் ஒரு தேசமாக இந்தியா மாறியிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் கூட்டு ஞானம் நம்மை வழிநடத்தாமல் இதை நம்மால் சாதித்திருக்க முடியாது.

பாபாசாஹேப் அம்பேத்கரும் பிறரும், நமக்கு ஒரு வரைபடத்தையும், தார்மீகக் கட்டமைப்பையும் அளித்தாலும், அந்தப் பாதையில் பயணிப்பது என்பது நமது பொறுப்பாக இருந்தது. நாம் பெரும்பாலும் அவர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மெய்யானவர்களாகவே நடந்திருக்கும் அதே வேளையில், காந்தியடிகளின் ஆதர்சமான சர்வோதயம் என்ற அனைவரின் நிலையையும் உயர்த்தல் என்பது நிறைவேற்றப்படாமல் இன்னும் எஞ்சி இருக்கிறது என்பதையும் நான் உணர்ந்திருக்கிறோம். இருந்தாலும், அனைத்து முனைகளிலும் நாம் கண்டிருக்கும் முன்னேற்றம் ஊக்கமளிப்பதாக இருக்கிறது.

சர்வோதயம் என்ற நமது இலக்கு நோக்கிய பயணத்தில், பொருளாதாரப் புறத்தில் நாம் கண்டுள்ள முன்னேற்றம் அதிகபட்ச ஊக்கமளிப்பதாக இருக்கிறது. கடந்த ஆண்டு, இந்தியா உலகிலேயே 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறியது. உலகின் மிக அதிகமான பொருளாதார நிலையற்ற தன்மைகள் நிலவும் காலகட்டத்தில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று. பெருந்தொற்று 4ஆவது ஆண்டினை எட்டியிருக்கிறது, உலகின் பெரும்பாலான பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை இது பாதித்திருக்கிறது. இதன் தொடக்க கட்டத்தில், கோவிட் 19 இந்தியாவின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தது.

ஆனால் திறமையான நமது தலைமையின் வழிகாட்டுதல், நமது தாங்கும் திறன் காரணமாக, நாம் விரைவிலேயே இந்தச் சறுக்கலை விட்டு வெளியேறினோம், நமது வளர்ச்சிப் பயணத்தை மீண்டும் தொடங்கினோம். மிக விரைவாக வளரும் பெரும் பொருளாதாரங்களில் ஒன்று இந்தியா. அரசின் தரப்பிலிருந்து குறித்த காலத்தில் புரியப்பட்ட முனைப்பான இடையீடுகள் காரணமாகவே இது சாத்தியமாகியிருக்கின்றது. குறிப்பாக தற்சார்பு பாரதம் முன்னெடுப்பானது, பெரும்பாலான மக்களிடத்திலே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் துறை குறித்த ஊக்கத்தொகைத் திட்டங்களும் உண்டு.

திட்டங்களிலும், செயல்திட்டங்களிலும் விளிம்புநிலை மக்களும் இணைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதும், கடினமான காலங்களைக் கடக்க அவர்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டிருக்கிறது என்பதும் பெரும் நிறைவை அளிக்கவல்ல விஷயங்கள். பிரதம மந்திரி ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் இலவச உணவுப்பொருள் வழங்கும் திட்டம் மார்ச் மாதம் 2020ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு அமல் செய்யப்பட்டதன் வாயிலாக, கோவிட்-19 பெருந்தொற்று என்ற இதுவரை காணா நோய்த்தொற்று காரணமாக, நாடெங்கிலும் பொருளாதாரத் தகர்வு ஏற்பட்டிருந்த வேளையிலும் கூட, நாட்டின் ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பினை அரசாங்கம் உறுதி செய்தது.

இந்த உதவி காரணமாக, யாருமே பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏழைக் குடும்பங்களின் நலன்களை முதன்மையானதாகக் கருதி, தொடர்ந்து இந்தத் திட்டக்காலம் நீட்டிக்கப்பட்டு, சுமார் 81 கோடி சககுடிமக்களுக்கு ஆதாயங்களை அளித்தது. இந்த உதவியை மேலும் நீட்டிக்கும் வகையிலே, 2023ஆம் ஆண்டிலும் கூட, பயனாளிகள் அவர்களின் மாதாந்திர ரேஷன் பொருட்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள இயலும். இந்தச் சரித்திரப்பூர்வமான செயல்பாடு காரணமாக, பலவீனமான பிரிவினர் மீது அக்கறையைச் செலுத்தும் அதே வேளையில், பொருளாதார முன்னேற்றத்தால் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்தப்படுவதற்கும் அரசாங்கம் வழிவகை செய்திருக்கிறது.

பொருளாதாரம் திடமான நிலையில் இருக்கும் இந்த வேளையில், பாராட்டத்தக்க முன்னெடுப்புக்களின் தொடரை நம்மால் தொடங்கவும், முன்னெடுத்துச் செல்லவும் முடிந்திருக்கிறது. அனைத்துக் குடிமக்களாலும், தனிப்பட்ட முறையிலும் சரி, கூட்டாகவும் சரி, தங்களுடைய மெய்யான ஆற்றல்களை உணர்ந்து வளம் பெறத் உகந்ததொரு சூழலை உருவாக்கித் தருதலே இறுதி இலக்காகும். கல்வியே இதற்கான சரியான அடித்தளம் அமைத்துக் கொடுப்பதால், தேசியக் கல்விக் கொள்கையானது பேராவல்மிக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இது கல்வியின் இருவகை முக்கிய குறிக்கோள்களை சரியான முறையிலே கவனத்தில் கொள்கிறது: அதாவது சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலுக்கான கருவி என்பது ஒன்று, சத்தியத்தை ஆய்ந்தறியும் வழி என்பது மற்றது. இந்தக் கொள்கையானது தற்கால வாழ்க்கைக்குப் பொருத்தமான வகையிலே நமது நாகரீகத்தின் படிப்பினைகளை அளிப்பதோடு, 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள படிப்போரைத் தயார் செய்கிறது. தேசிய கல்விக் கொள்கையானது கற்றல் செயல்பாட்டை விரிவாக்குவதிலும், ஆழப்படுத்துவதிலும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பைப் போற்றுகிறது.

தொழில்நுட்பமானது வாழ்க்கையையே மாற்றக்கூடிய சாத்தியக்கூறுகளை அளிக்கிறது என்பதை கோவிட் 19இன் தொடக்க நாட்களிலிருந்தே நாம் உணரத் தொடங்கி விட்டோம். டிஜிட்டல் இந்தியா மிஷன் திட்டமானது செய்தி மற்றும் தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பத்தை, ஊரகப்பகுதி-நகர்ப்புறப் பிளவை இணைப்பதன் மூலம் அனைவருக்குமானதாகச் செய்ய முயற்சிக்கிறது. கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கம் அடையும் போது, தொலைவான இடங்களிலும் இருக்கும் மேலும் அதிகமானோர் இணையம் மற்றும் அரசாங்கம் வழங்கும் பலவகையான சேவைகளால் ஆதாயங்களை அனுபவித்து வருகிறார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நமது சாதனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்ளக் காரணங்கள் அவசியம் உண்டு.

விண்வெளித் தொழில்நுட்பத்தில் வெகுசில முன்னோடிகள் என்ற வகையில் இந்தியாவும் ஒன்று. இந்தத் துறையில் நீண்டகாலம் முன்பே செய்திருக்க வேண்டிய சீர்திருத்தங்கள் தற்போது நடைபெற்றுவரும் அதே வேளையில், தனியார் நிறுவனங்களும் இந்தத் தேடலில் இணைய வரவேற்கப்படுகிறார்கள். இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்குக் கொண்டு செல்லும் ககன்யான் திட்டம் முன்னேற்றம் கண்டு வருகிறது. முதன்முதல் மனிதர்களைக் கொண்டு செல்லும் இந்தியாவின் விண்வெளிப் பயணமாக இது இருக்கும். நாம் விண்மீன்களை எட்டும் அதே வேளையில், நமது கால்கள் பூமியில் நிலைபெற்றிருக்கின்றன.

இந்தியாவின் செவ்வாய் கிரகப் பயணத்திற்கு சக்தி கொடுத்தவர்கள், அசாதாரணமான பெண்கள் அடங்கிய ஒரு குழு எனும் அதே வேளையில், நமது சகோதரிகளும் பெண்களும் மற்ற துறைகளிலும் பின் தங்கியிருக்கவில்லை. பெண்களுக்கு அதிகாரமளிப்பும், பாலின சமத்துவமும் பகட்டான கோஷங்களாக மட்டும் இருக்கவில்லை, நாம் அண்மை ஆண்டுகளில் இந்த இலக்குகளை அடைவதில் மகத்தான முன்னேற்றத்தையும் கண்டிருக்கிறோம். பெண் குழந்தைகளைக் காப்போம், அவர்களுக்குக் கல்வியளிப்போம் இயக்கத்தில் மக்களின் பங்களிப்பு அதிகரிக்கும் வேளையிலே, பெண்களின் பிரதிநிதித்துவம், அனைத்துத் துறைச் செயல்பாடுகளிலும் அதிகரித்து வருகிறது.

பல மாநிலங்களுக்கும், பல கல்வி நிறுவனங்களுக்கும் நான் சென்றிருந்த போது, அங்கே பல்வேறு தொழில்துறை வல்லுனர்களின் குழுக்களையும் சந்திக்க நேர்ந்தது; அங்கே இருக்கும் இளம் பெண்களின் தன்னம்பிக்கை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாளைய இந்தியாவுக்கு வடிவம் கொடுப்பதில் அவர்களே பெரும்பங்கு வகிப்பார்கள் என்பதில் என் மனதில் எந்த ஐயமும் இல்லை. தங்களின் சிறப்பான திறன்களுக்கு ஏற்ப, நாட்டைக் கட்டமைப்பதில் பங்களிப்பு அளிக்க, மக்கள் தொகையின் இந்தப் பாதி ஊக்கப்படுத்தப்பட்டால், என்ன அற்புதங்கள் தான் நிகழாது?

பட்டியலின மக்கள் மற்றும் சீர்மரபினர் உள்ளிட்ட விளிம்புநிலையில் வாழும் சமூகங்கள் பற்றியதான இதே அதிகாரப்பங்களிப்பு பற்றிய தொலைநோக்குத் தான் அரசாங்கத்தை வழிநடத்துகிறது. சொல்லப் போனால், தடைகளை அகற்றி மேம்பாட்டில் அவர்களுக்கு உதவிகரமாக இருப்பது மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து கற்பதும் கூட ஒரு குறிக்கோள் தான். பழங்குடியின சமூகங்கள் குறிப்பாக, சூழலைப் பாதுகாப்பது தொடங்கி, சமூகத்தை மேலும் இணக்கமானதாக ஆக்குவது வரை, பல துறைகளில் வளமான படிப்பினைகளை கொண்டிருப்பவை.

ஆளுகையின் அனைத்து நிலைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களின் ஆக்கப்பூர்வமான ஆற்றல்களைக் கட்டவிழ்க்க அண்மை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புக்களின் தொடர்கள் காரணமாக, உலகம் இந்தியாவை ஒரு புதிய மரியாதை கலந்த பார்வையோடு பார்க்கத் தொடங்கி இருக்கிறது. பல்வேறு உலக அமைப்புகளில் நமது இடையீடுகள் ஆக்கப்பூர்வமான வித்தியாசத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. உலக மேடையில் இந்தியா ஈட்டியிருக்கும் நன்மதிப்பு, புதிய கடமைகள், புதிய பொறுப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டு சேர்த்திருக்கிறது.

இந்த ஆண்டு, இந்தியா 20 நாடுகள் அடங்கிய ஜி 20 மாநாட்டின் தலைமைப் பதவியை ஏற்றிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். உலக சகோதரத்துவமே நமது குறிக்கோளாக இருக்கையில், நாம் அனைவருக்குமான அமைதி-வளத்தையே ஆதரிக்கிறோம். அந்த வகையிலே ஜனநாயகத்தையும், பல்தரப்பு பங்கெடுத்தலையும் ஊக்கப்படுத்த ஜி 20 தலைமை ஒரு வாய்ப்பு மட்டுமல்ல, மேம்பட்டதொரு உலகையும், எதிர்காலத்தையும் உருவாக்கவும் சரியான மேடையும் ஆகும். இந்தியாவின் தலைமையின் கீழ், ஜி20 குழுவானது, மேலும் சமத்துவமும், நீடித்ததன்மையும் உடைய உலகவரிசையை உருவாக்கும் முயற்சிகளை இன்னும் அதிகப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

உலக மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பங்கும், உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதமாக ஜி 20 கூட்டமைப்பு இருப்பதால், உலகத்தை எதிர்நோக்கும் சவால்களுக்கான சரியான தீர்வுகளைக் கலந்தாய்வு செய்ய உகந்த அமைப்பாக இது இருக்கும். உலக வெப்பமயமாதல், சூழல் மாற்றம் ஆகியன இவற்றில் மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடியவை. உலக வெப்பநிலை அதிகரித்துவரும் அதே வேளையில், உச்சபட்ச பருவநிலை தொடர்பான நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.

நாம் இப்போது எதிர்கொள்ளும் பெருங்குழப்பம் என்னவென்றால், மேலும் மேலும் மனிதர்களை ஏழ்மையிலிருந்து வெளிக் கொண்டு வரவேண்டுமென்றால், பொருளாதார வளர்ச்சி தேவை, ஆனால் அந்த வளர்ச்சி படிம எரிபொருளிலிருந்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, மற்றவர்களை விட அதிகமாக ஏழைகள் தாம் உலக வெப்பமயமாதலின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மாற்று எரிபொருள் ஆதாரங்களை மேம்படுத்துவதும், அவற்றை பிரபலப்படுத்துவதும் தீர்வுகளில் ஒன்று. சூரிய சக்தி மற்றும் மின்வாகனங்கள் கொள்கைக்கு ஒரு உந்துதல் கொடுத்ததன் வாயிலாக, இந்தியா இந்தத் திசையில் பாராட்டத்தக்க ஒரு தலைமையை ஏற்றிருக்கிறது. உலக அளவிலே ஆனால், தொழில்நுட்ப மாற்றம் மற்றும் நிதியுதவி என்ற வகைகளில், வளர்ந்துவரும் பொருளாதாரங்களுக்கு வளர்ந்த நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு இடையேயான சீர்நிலையைத் தக்க வைத்துக் கொள்ள, நாம் பண்டைய பாரம்பரியங்களை புதிய கண்ணோட்டத்துடன் காண வேண்டும். நமது அடிப்படை முதன்மைகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாரம்பரியமான வாழ்க்கை விழுமியங்களின் அறிவியல் கோணங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இயற்கையின்பால் மதிப்பு, பரந்த பிரபஞ்சத்திடம் பணிவு என்ற உணர்வை நாம் மறுபடியும் நம்மில் கிளர்ந்தெழச் செய்ய வேண்டும். நமது காலங்களின் மெய்யான ஒரு இறைத்தூதர் அண்ணல் காந்தியடிகள். கட்டுப்பாடற்ற தொழில்மயமாக்கலால் ஏற்படக்கூடிய பேரழிவுகளை தொலைநோக்கால் கண்டு, உலகம் தன்னுடைய போக்கைச் சரி செய்ய வேண்டும் என்று எச்சரித்தார்.

நொறுங்கும் நிலையில் இருக்கும் நமது கோளில், நமது குழந்தைகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால், நாம் நமது வாழ்க்கைமுறையை மாற்றிக் கொண்டாக வேண்டும். மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியவற்றுள் ஒன்று தான் உணவு. இந்தியா அளித்த ஆலோசனையை ஏற்று, 2023ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் அறிவித்திருப்பதை நான் மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்டுகிறேன். நமது உணவுத்தட்டில் சிறுதானியங்கள் முக்கியமான பங்கு உடையவை, சமூகத்தின் பல பிரிவுகளில் இவை மீண்டும் தங்களுடைய இடத்தைப் மீட்டெடுத்து வருகின்றன. தினை போன்ற சிறுதானியங்களுக்கு நீருக்கான தேவை குறைவாக இருப்பதாலும், அதிக அளவு ஊட்டச்சத்தை அளிப்பதாலும், இவை சூழலுக்கு நேசமானவை. மேலும் அதிகமானோர் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, நமது உடல்நலனும் மேம்படும்.

நமது குடியரசு மேலும் ஓராண்டைக் கடந்திருக்கிறது, இன்னுமோர் ஆண்டு தொடங்குகிறது. இதுவரை காணாத மாற்றம் நிறைந்த நேரமாக இது இருந்திருக்கிறது. பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து, வெகு சில நாட்களிலேயே உலகம் மாறிப் போனது. இந்த மூன்று ஆண்டுகளில், வைரஸ் கிருமியை நாம் பின்தங்கச் செய்து விட்டோம் என்று எப்போதெல்லாம் நாம் கருதினோமோ, அப்போதெல்லாம் அது தனது அருவருப்பான முகத்தைக் காட்டத் தவறியதில்லை. ஆனால் பீதியடையத் தேவையில்லை, ஏனென்றால், இந்தக் காலகட்டத்தில் நமது தலைமை, நமது விஞ்ஞானிகள், மருத்துவர்கள், நமது நிர்வாகிகள், கொரோனா போராளிகள் ஆகியோர், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள, எத்தகைய முயற்சியையும் மேற்கொள்வார்கள் என்பதை நாம் கற்றுக் கொண்டுள்ளோம். அதே நேரத்தில், நமது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கைவிடாமலும், விழிப்போடும் இருக்க வேண்டும் என்பதையும் நாமனைவரும் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

நமது குடியரசின் வளர்ச்சிப் பயணத்திற்குத் தங்களுடைய விலைமதிப்பில்லா பங்களிப்பை நல்கியமைக்கு, பல்வேறு துறைகளில் பணியாற்றிய பல தலைமுறையினர் பாராட்டுக்குரியவர்கள். விவசாயிகள், தொழிலாளிகள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் ஆகியோரின் பங்குபணிகளை நான் பாராட்டும் அதே வேளையில், ஜெய் ஜவான், ஜெய் கிஸான், ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தான் என்ற உணர்வை அடியொற்றி, நமது நாடு பயணிக்கத் தேவையான ஆற்றலை, இவர்களின் ஒருங்கிணைந்த பலம் தான் கொடுக்கிறது. தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு அளிக்கும் ஒவ்வொரு குடிமகனையும் நான் பாராட்டுகிறேன். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் மகத்தான தூதுவர்களாகத் திகழும் நமது அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியரசுத் திருநாள் என்ற இந்தத் தருணத்திலே, நமது எல்லைகளைப் பாதுகாத்து, நாட்டின் பொருட்டு எந்தத் தியாகத்தையும் புரியச் சித்தமாக இருக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு நான் எனது சிறப்பான பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன். சக குடிமக்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்பினை வழங்கும் துணை ராணுவப்படை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

கடமைப்பாதையில் பயணிக்கும் போது தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த ராணுவம், துணை ராணுவம், காவல்துறை ஆகியவற்றைச் சேர்ந்த, நமது நெஞ்சுரம் மிக்க வீரர்களுக்கு என் வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன். எனக்குப் பிரியமான குழந்தைகள் அனைவருக்கும் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கான நல்லாசிகளைத் தெரிவிக்கிறேன். இந்தக் குடியரசுத் திருநாளை முன்னிட்டு உங்களனைவருக்கும் நான் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்