அந்தமான் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு ‘பரம்வீர் சக்ரா’ விருதாளர்கள் பெயர் - பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி, அந்தமான் நிகோபாரின் 21 தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டியுள்ளார்.

சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள், பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்படி நேதாஜியின்126-வது பிறந்தநாள் நேற்று பராக்கிரம தினமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அந்தமான்-நிகோபாரில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார். இதன்படி அந்த தீவுகளுக்கு ஜதுநாத் சிங், ராம் ரகோபா ராணே, கரம் சிங், சோம்நாத் சர்மா, ஜோகிந்தர் சிங்,தன்சிங் தாபா, குர்பச்சான் சிங், பிருசிங், ஆல்பர்ட், ஆர்திசிர், அப்துல் ஹமீது, ஷிதான் சிங், ராமசாமி பரமேஸ்வரன், நிர்மல்ஜித் சிங், அருண்,ஹோஷியார் சிங், மனோஜ் பாண்டே,விக்ரம் பத்ரா, பணா சிங், யோகேந்திர சிங், சஞ்சய் குமார் ஆகியோரது பெயர்கள் சூட்டப்பட்டன.

அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் நடைபெற்ற பெயர் சூட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அவர் பேசியதாவது:

அந்தமான் நிகோபாரின் 21 தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் புதிய வரலாறு எழுதப்படுகிறது.

நேதாஜிக்கு நினைவிடம்: நேதாஜி வாழ்ந்த அந்தமான் தீவில்அவரது வாழ்க்கை, பங்களிப்பை நினைவுகூரும் வகையில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. அதற்கும்தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நாட்டில் முதல்முறையாக நமது மூவர்ண கொடியை ஏற்றிய இடம் அந்தமான். இங்கு நேதாஜி மூவர்ண கொடியை ஏற்றிய இடத்தில் இன்றுதேசியக் கொடி கம்பீரமாக பறக்கிறது. வீர சாவர்க்கர் போன்ற எண்ணற்ற மாவீரர்கள் நாட்டுக்காக இந்தமண்ணில் சிறைவாசம் அனுபவித்தனர். ஆனால், இந்த வீர வரலாற்றுக்கு பதிலாக, அடிமைத்தனத்தின் முத்திரையை அந்தமான் தீவுகளின் பெயர்கள் கொண்டிருந்தன.

அதை மாற்றியமைக்க முடிவு செய்தோம். 4 ஆண்டுகளுக்கு முன்பு3 முக்கிய தீவுகளுக்கு இந்தியப் பெயர்களை சூட்டினோம். இதன்படி ராஸ் தீவு இப்போது நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் தீவு என்று அழைக்கப்படுகிறது. இந்த தீவில்தான்நேதாஜிக்கு பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.

கடந்த 2019-ல் டெல்லி செங்கோட்டையில் நேதாஜி அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. டெல்லி கடமை பாதையில் நேதாஜியின் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்ததுமே நேதாஜிக்கு உரிய மரியாதையை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், நீண்ட தாமதத்துக்கு பிறகு தற்போதைய மத்திய அரசு அவரை கவுரவித்து வருகிறது.

தற்போது, அந்தமானின் 21 தீவுகளுக்கு ‘பரம்வீர் சக்ரா’ விருதாளர்களின் பெயர்களை சூட்டியுள்ளோம். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அந்த வீரர்கள் வெவ்வேறு மொழி, வாழ்க்கை முறையை கொண்டவர்கள். எனினும், தாய்நாட்டின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாததேசபக்தி அவர்களை ஒன்றிணைத்தது. ஒரே குறிக்கோள், ஒரே பாதை, ஒரே லட்சியத்துடன் நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையை அவர்கள் அர்ப்பணித்தனர். அவர்களது பெயரை அந்தமான் தீவுகளுக்கு சூட்டியிருப்பதன் மூலம் ‘ஒரே இந்தியா, மிகச் சிறந்த இந்தியா' என்ற உணர்வு மேலோங்குகிறது.

முந்தைய ஆட்சியில், அந்தமான், வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. பாஜக ஆட்சியில் நாட்டின் அனைத்து பகுதிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, அந்தமானின் சுற்றுலா துறைக்கு அதிக ஊக்கம் அளிக்கப்படுகிறது. ஆப்டிகல் ஃபைபர் மூலம் அந்தமானுக்கு அதிவேக இணைய வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் மற்ற பகுதிகள்போலவே அந்தமானும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நேரத்தில், வளர்ச்சியின் உச்சத்தை தொடும் புதிய இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

போர்ட்பிளேரில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமித் ஷா பேசும்போது, ‘‘தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டிய முதல்நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான வீரர்கள் அந்தமானின் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். அதை நாடு நினைவுகூர்கிறது’’ என்றார்.

ட்விட்டரில் பிரதமர் மோடி நேற்றுவெளியிட்ட பதிவில், ‘பராக்கிரம தினமான இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு மரியாதை செலுத்துவதோடு, இந்திய வரலாற்றில் அவரது ஈடு இணையில்லா பங்களிப்பை நினைவுகூர்கிறேன். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அவர் காட்டிய தீவிர எதிர்ப்பால் அனைவராலும் நினைவில் கொள்ளப்படுகிறார். இந்தியா குறித்த அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற நாம் பணியாற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்