“அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன்” - மகாராஷ்ட்டிர ஆளுநர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக விரும்புவதாகவும், இதனை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்திருப்பதாகவும் மகாராஷ்ட்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மும்பை வந்திருந்தபோது, அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். எஞ்சி இருக்கும் எனது வாழ்வை படிப்பது, எழுதுவது உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அன்பையும் பரிவையும் தொடர்ந்து பெற்று வந்திருக்கிறேன். இந்த விஷயத்திலும் அதைப் பெறுவேன் என நம்புகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக மகாராஷ்ட்டிர மக்களின் அன்பை பெற்று வந்துள்ளேன். இதை ஒருபோதும் மறக்க மாட்டேன்'' என தெரிவித்துள்ளார்.

80 வயதாகும் பகத் சிங் கோஷியாரி உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். பாஜகவில் இருந்த இவர், அக்கட்சி சார்பில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்துள்ளார். அதோடு, உத்தராகண்ட்டின் முதல்வராகவும் இருந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இவர் மகாராஷ்ட்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

மகாராஷ்ட்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்ததில் இருந்து, ஆளுநர் கோஷியாரி தொடர்பாக சர்ச்சைகள் எழத் தொடங்கின. அதோடு, மகாராஷ்ட்டிராவின் மாபெரும் இந்து அடையாளமாகத் திகழும் சிவாஜி மகாராஜாவை, அவர் பழைய அடையாளம் என கோஷியாரி குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக உத்தவ் தாக்கரே போராட்டங்களை முன்னெடுத்தார்.

இந்நிலையில், ஆளுநர் பொறுப்பு உள்பட அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக விரும்புவதாக கோஷியாரி தெரிவித்திருப்பது மகாராஷ்ட்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE