பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இடம்பெறும் புதிய அம்சங்கள் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சியில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது. இது, சுமார் 96 வருடங்களுக்கு முன் ஜனவரி 18-ல் திறக்கப்பட்டு இன்றுவரை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் கூடுதல் வசதிகளுக்காக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கு கடந்த 2020 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நாடாளுமன்ற கட்டிடம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

‘சென்ட்ரல் விஸ்டாஸ்’ எனும் பெயரில் மத்திய அமைச்சகங்களின் அலுவலகங்கள் கொண்ட கட்டிடங்களை டாடா நிறுவனம் நிர்மாணித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைகிறது. பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடப் பணிகளை கடந்த நவம்பரில் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இதன் பணிகள் முடிவடைய மேலும் 3 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது.

இதற்கிடையில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் ஜனவரி 31-ல் தொடங்கும் என செய்தி வெளியானது. ஆனால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இதனை மறுத்துள்ளார். எனினும் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு புதிய கட்டிடத்தில் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன.

தற்போதைய கட்டிடத்தில் மைய மண்டபம் உள்ளது. இங்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் புதிய கட்டிடத்தில் மைய மண்படம் இல்லை. இதற்கு பதிலாக ‘அரசியலமைப்பு அரங்கு’ எனும் பெயரில் ஓர் அரங்கு அமைகிறது. இதை சுற்றிலும் இரு அவை எம்.பி.க்களுக்காக நூலகம், நாடாளுமன்ற குழுக்களுக்கான அறைகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. நாடாளுமன்றம் தொடர்புடைய விழாக்கள் இந்த அரங்கில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் புதிய கட்டிடத்தின் மக்களவையிலேயே நடைபெறும் எனத் தெரிகிறது. 1,272 உறுப்பினர்கள் வரை அமரும் அளவில் இது விசாலமாக அமைகிறது.

தற்போது மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 543 ஆகவும் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 245 ஆகவும் உள்ளது. இந்நிலையில் புதிய கட்டிடத்தில் இரு அவைகளிலும் இருக்கைகள் எண்ணிக்கை கூட்டப்பட்டுள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன. இதன் பின்னணியில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

இதன்படி, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு எழுந்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பின்னடைவு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. மாறாக பாஜக ஆதிக்கம் உள்ள உத்தரபிரதேசம், பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதேபோல் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் பாஜக அரசு கையில் எடுக்கும் திட்டமும் உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சி வருகின்றனர். இதுவும் மகளிர் மசோதாவுக்கு ஒரு தடையாக உள்ளது.

இந்நிலையில் மறுசீரமைப்பில் கூடும் தொகுதிகளை மகளிருக்கு ஒதுக்கவும் ஒருதிட்டம் வகுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதன்மூலம், அம்மசோதாவை நிறைவேற்றிய பெருமையும் தங்களுக்கு கிடைக்கும் என பாஜக கருதுகிறது. மேலும் இதை எதிர்க்கும் கட்சிகளின் மகளிர் வாக்குகளும் தங்கள் பக்கம் திரும்பும் என பாஜக கருதுகிறது.

புதிய கட்டிடத்தின் சில மாற்றங்களும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவையில் இந்தியாவின் தேசியப் பறவையான மயில் நிறத்தில் இருக்கைகள் அமைகின்றன. மாநிலங்களவையில் இருக்கைகளுக்கு தாமரை நிறம் அளிக்கப்படுகிறது. இது பாஜக உள்ளிட்டஇந்து அமைப்புகளின் காவி நிறத்தை போன்றது.

இது பாஜகவுக்கு சாதகமாக அமைவதால், இதற்கு எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் புதிய கட்டிடத்திற்கு வைக்கப் பட உள்ள சம்ஸ்கிருத மொழி பெயரும் சர்ச்சைக்குள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தகவல்கள் முன்கூட்டியே வெளியாகாமல் இருப்பதற்காக புதிய கட்டிடத்தில் அதன் அலுவலர்கள் கூட காரணம் இன்றி, நுழைய முடியாதபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய கட்டிடம் சுமார் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் அமைகிறது. பழைய கட்டிடம் முழுவதும் அருங்காட்சியகமாக மாற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE