இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்க பாஜக தயங்குவது ஏன்?- மாநிலங்களவையில் யெச்சூரி கேள்வி

இராக் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பாஜக காஸா விவகாரத்தில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்க தயங்குவது ஏன் என மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

காஸா தாக்குதல் குறித்து உடனடி விவாதம் கோரி எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க அனு மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் மூன்றாவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

அவை கேள்வி நேரத்தின் போதே இரண்டு முறையும் பின்னர் பிற்பகல் 2.30 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

காஸா விவகாரம் குறித்து வரும் திங்கள் கிழமை (ஜூலை 21-ம் தேதி) மதியம் 12 மணிக்கு விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன், உக்ரைனில் மலேசிய விமானம் கிளர்ச்சியாளர்களால் வீழ்த்தப்பட்ட 298 பேர் பலியானதற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவை நடவடிக்கை தொடங்கியவுடனேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி எழுந்து பேசினார்.

அவர் கூறியதாவது: "உக்ரைன் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது போல், காஸா தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலியானது குறித்து அவைத் தலைவரே விவாதத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். ஐ.நா. சபை காஸா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. அப்படி இருக்கும் போது நாம் காஸா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாமா?. ஐ.நா அறிக்கையின் படி காஸா தாக்குதலில் பலியானவர்களில் 75% அப்பாவி பொதுமக்கள். இவர்களில் 46% பேர் பெண்கள் 12% பேர் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள். மனிதாபிமான அடிப்படையில் அவைத்தலைவர் காஸா தாக்குதல் பற்றி அவையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அடல் பிஹாரி வாஜ்பாயி பிரதமராக இருந்த போது, இராக் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏன் அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு நல்லுறவு இல்லையா?. ராஜாங்க உறவுகளை மீறியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே காலம் தாழ்த்தாமல் அவையில், காஸா பிரச்சினை குறித்து விவாதம் நடத்த வேண்டும்" என்றார்.

அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அவைத்தலைவர் காஸா தாக்குதல் பற்றி குறிப்பிடவில்லை என்பது யெச்சூரிக்கும், அவைத்தலைவருக்கும் இடையேயான விவகாரம். ஆனால், மத்திய அரசு காஸா விவகாரம் குறித்து வரும் திங்கள் கிழமை (ஜூலை 21-ம் தேதி) மதியம் 12 மணிக்கு விவாதிக்க தயாராக இருக்கிறது என்றார்.

ஆனால் எதிர்கட்சியினரை மத்திய அரசின் இந்த வாதம் எவ்விதத்திலும் சமாதானப்படுத்துவதாக அமையவில்லை. அவையில் கூச்சல், குழப்பம் நீடித்தது. காங்கிரஸ் உறுப்பினர் பிரமோத் திவாரி, மத்திய அரசு ஏன் விவாதத்தை நடத்துவதில் இருந்து தப்பி ஓடுகிறது என்றார். தொடர்ந்து அவையில் கூச்சல், குழப்பம் நீடித்தது. இதனால், கேள்வி நேரத்தின் போது இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடிய போது சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், அரசு திங்கள் கிழமை விவாதத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதால், கேள்வி நேரத்தை நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். எதிர்கட்சியினரை சமாதானப்படுத்த அவைத்தலைவர் குரியன் முற்பட்டார். ஆனால் காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE