விபத்துக்கு நஷ்டஈடு கேட்ட இளைஞரை 3 கி.மீ. தூரம் காரில் இழுத்து சென்ற பெண்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 17ம் தேதி சாலை விபத்து தொடர்பான சண்டையில் சஹில் அஹமது என்ற இளைஞர் 71 வயது முதியவரை இரு சக்கர வாகனத்தில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று ஞானபாரதி நகர் சாலையில் மாருதி காரும், நெக்ஸான் காரும் உரசிக் கொண்டதால் இரு கார்களின் ஓட்டுந‌ர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மாருதி காரின் ஓட்டுநர் தர்ஷன் (29) நெக்ஸான் காரின் ஓட்டுநர் பிரியங்காவிடம் தனது வாகனத்தை பழுது பார்க்க ரூ.10 ஆயிரம் கேட்டார். அதனை தர மறுத்த பிரியங்கா காரில் இருந்து தப்பிக்க முயற்சித்த போது, தர்ஷன் அவர் காரின் முன்பாக போய் நின்றார். அதனை பொருட்படுத்தாமல் பிரியங்கா காரை கிளப்பியதால், காரின் பானெட்டில் (முன் பக்கம்) தொங்கினார். சுமார் 3 கிமீ தூரத்துக்கு தர்ஷனை காரில் தொங்கியவாறு இழுத்து சென்றார். போக்குவரத்து போலீஸார் நிறுத்திய பின்னரே வாகனத்தை நிறுத்தினார். அதன்பின் போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரியங்காவை கைது செய்தனர்.

இதனிடையே பிரியங்காவின் கணவர் பிரமோத், தர்ஷன் தனது மனைவியை வாகனத்தின் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE