ஹபீஸ் சயீத் மனதை வேதிக் வென்றிருப்பார்: யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து

பாகிஸ்தான் தீவிரவாதியான ஹபீஸ் சயீதின் மனதை பத்திரிகையாளர் வேத் பிரதாப் வேதிக் வென்றிருப்பார் என யோகா குரு ராம் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ராம்தேவ் கூறும்போது, ‘‘வேதிக் ஒரு பத்திரிகையாளர். அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால் கண்டிப்பாக வேதிக் தனது சந்திப்பில் சயீதின் மனதை வெல்ல முயன்றிருப்பார் என்பது உறுதி’’ எனத் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, “இந்த விவகாரம் தொடர்பாக வேதிக் தானே முன்வந்து விளக்கம் அளிப்பதுதான் முறையாக இருக்கும். இது தொடர்பாக நான் கருத்து கூறுவது பொருத்தமாக இருக்காது” என்றார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்த காஷ்மீர் விடுதலைப் போராட்ட தலைவர்களில் ஒருவரான யாசின் மாலிக், ஹபீஸ் சயீதுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டதால் இந்தியாவின் கடும் கண்டனத்திற்கு உள்ளானார். அவரை பல பாஜக தலைவர்களும் விமர்சித்துப் பேசினர்.

இதைக் குறிப்பிட்டு பேசிய சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் ஷாஹீத் சித்திக்கீ, ‘‘வேதிக், ஹபீஸ் சயீதுடனான சந்திப்பை தவிர்த்திருக்க வேண்டும். இது ஒரு வகையில் சயீதின் செயல்களுக்கு அங்கீகாரம் அளித்தது போலாகிவிட்டது. தீவிரவாதத்துக்கு ஆதரவான சயீதின் நடவடிக்கைகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் ஆபத்தானது’’ என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அன்வர் கூறும்போது, ‘‘பத்திரிகையாளர்கள் தங்கள் பணி நிமித்தமாக யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். இதுகுறித்து அரசியல்வாதிகள் கேள்வி எழுப்ப முடியாது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE