ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் நுழைந்தது இந்திய ஒற்றுமை யாத்திரை

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று காலை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கத்துவாவிற்குள் நுழைந்தது. இன்று யாத்திரையில் 125வது நாள். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், ஹரியாணா என பல மாநிலங்களையும் கடந்து தற்போது காஷ்மீரில் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை கத்துவாவில் யாத்திரை நடைபெற்றது.

இந்த யாத்திரை குறித்து நேற்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், "சங்கராச்சாரியர் தான் 8ஆம் நூற்றாண்டில் அடர்ந்த வனங்கள் வாயிலாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை சென்றார். அதன் பின்னர் ராகுல் காந்தி தான் இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளார்" என்று பாராட்டியிருந்தார். மாதோபூரில் ராகுல் காந்தி கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புரையில் ஃபரூக் அப்துல்லா, "என் ஆயுள் முடிவதற்குள் எல்லோரும் மதிக்கப்படும் மதச்சார்பற்ற இந்தியாவைக் காண விரும்புகிறேன்" என்று நெகிழ்ச்சி பொங்க பேசியிருந்தார்.

ராகுல் காந்தி தனது காஷ்மீர் பிரவேசம் பற்றி, இது எனக்கு வீடு திரும்புதல் அனுபவத்தை தந்துள்ளது. நான் என் வேர்களை சென்றடைகிறேன். ஜம்மு காஷ்மீர் மக்களின் வேதனை எனக்குத் தெரியும். நான் உங்களின் வேதனையைப் பகிர்ந்து கொள்ளவே இங்கே வந்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE