''எனக்கு ஒரே ஒரு கனவுதான் இருக்கிறது. அது...'' - பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்

By செய்திப்பிரிவு

பாட்னா: தனக்கு ஒரே ஒரு கனவுதான் இருக்கிறது என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் பேரணி அம்மாநிலத்தின் கம்மம் நகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், சிபிஎம் மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன், சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியில் நிதிஷ் குமார் கலந்து கொள்ளாதது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “எனக்கு அந்தப் பேரணி பற்றி தெரியாது. நான் வேறு சில வேலைகளில் மும்முரமாக இருந்தேன். யாரெல்லாம் அழைக்கப்பட்டார்களோ அவர்களெல்லாம் அதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு எதுவும் தேவையில்லை. எனக்கு ஒரே ஒரு கனவு இருக்கிறது. அது, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதுதான். அது நாட்டுக்கு நல்லது” என தெரிவித்துள்ளார்.

கம்மம் நகரில் நேற்று நடைபெற்ற பேரணியில் பேசிய கே. சந்திரசேகர ராவ், ''பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாகவே நான் இதைச் சொல்கிறேன். இந்த தேர்தலுடன் நீங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். ஏனெனில், தனியார்மயம்தான் உங்கள் கொள்கை. தேசியமயமாக்குவதுதான் எங்கள் கொள்கை.'' என தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ் யாதவ், ''2024 தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள்தான் உள்ளன. பாஜக தனது நாட்களை எண்ண தொடங்கி உள்ளது. தற்போதைய ஆட்சியின் காலம் முடிந்ததும் அது கூடுதலாக ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்காது.'' என குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE