புதுடெல்லி: திரிபுராவில் பிப்.16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் பிப்.27-ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி வெளியிடப்படுகின்றன.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 3 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
திரிபுராவில் பிப்.16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் பிப்.27-ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறும். தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிப்.16-ல் தேர்தல் நடக்க உள்ள திரிபுராவில் வேட்புமனு தாக்கல் வரும் 21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது. 31-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுவை வாபஸ் பெற பிப்.2-ம் தேதி கடைசி நாள்.
அதேபோல, பிப்.27-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள மேகாலயா, நாகாலாந்தில் வேட்புமனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்.7-ம் தேதி முடிவடைகிறது. பிப்.8-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற பிப்.10-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளித் தேர்வுகள், பாதுகாப்பு படைகளை அனுப்புதல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் உடன் இருந்தனர்.
தலா 30 தொகுதிகள்: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும் தலா 30 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 3 மாநிலங்களிலும் பெண் வாக்காளர்களின் பங்களிப்பு எப்போதும் அதிகமாக இருக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
நடத்தை விதிகள் அமல்: தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மேற்கண்ட 3 மாநிலங்கள் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
2023-ம் ஆண்டில் மொத்தம் 9 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடக்க உள்ளன. முதலாவதாக தற்போது 3 வடகிழக்கு மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திரிபுராவில் பாஜகவும், நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சியும், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியும் ஆட்சியில் உள்ளன. திரிபுராவில் கடந்த 2018-ல் நடந்த தேர்தலில், பாஜக முதல்முறையாக வெற்றி பெற்றதால், இங்கு பாஜக கூடுதல் கவனம் செலுத்துகிறது.
3 வடகிழக்கு மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக மொத்தம் 9,125 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைக்கிறது. இது கடந்த 2018-ம் ஆண்டில் அமைக்கப்பட்டதைவிட 634 அதிகம். 73 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா வசதிகள் செய்யப்படுகின்றன. 376 மையங்களை முழுமையாக பெண் அதிகாரிகளே நிர்வகிப்பார்கள். வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை நிரந்தரமாக செய்து தருமாறு மாநில அரசுகளை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வசதிகள் பள்ளிகளுக்கு நிரந்தர பரிசுகளாக இருக்கட்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27-ல் இடைத்தேர்தல்: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் திருமகன் ஈவெரா (46). பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் பேரனும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா, கடந்த 4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேரவை செயலர் அறிவித்தார்.
தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்துக்குள் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இந்நிலையில், 3 மாநிலதேர்தல்களுடன் சேர்த்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.31 தொடங்கி பிப்.7 வரை நடக்கிறது. மனுக்கள் பரிசீலனை பிப்.8-ல் நடக்கிறது. மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் பிப்.10-ம் தேதி. வாக்குப்பதிவு பிப்.27-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago