செல்ஃபி எடுக்க வந்தே பாரத் ரயிலில் ஏறிய நபர்: தானியங்கி கதவு மூடியதால் 159 கி.மீ. பயணம்

By செய்திப்பிரிவு

விஜயவாடா: வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய நபர் ஒருவர் அங்கே சில செல்ஃபிகளை எடுத்துக் கொண்டு இறங்க முயற்சித்தபோது தானியங்கி கதவு மூடிவிட அவர் விஜயவாடா வரை 159கிமீ பயணிக்க நேர்ந்துள்ளது. அந்த நபர் ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவர ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் ஏறியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 15 ஆம் தேதி நடந்துள்ளது.

இது குறித்து ரயில்வே துறை கூறியுள்ளதாவது: கடந்த ஜனவரி 15 ஆம் தேதியன்று ராஜமகேந்திரவரம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஆண் ஏறியுள்ளார். அவர் அந்த ரயிலில் பயணிக்க ஏறவில்லை. ரயிலில் சில செல்ஃபிகளை எடுத்துக் கொள்வதற்காக ஏறியுள்ளார். அதனால் அவர் டிக்கெட் ஏதும் வாங்கவில்லை. அந்த நபர் ரயிலை சுற்றிப் பார்த்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது ரயில் கதவு தானாக மூடி புறப்பட்டது. பதறிப்போன அந்த நபர் கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் கதவைத் திறக்க இயலவில்லை.

இதனையடுத்து விஷயத்தை டிக்கெட் பரிசோதகரிடம் கூறியுள்ளார். அப்போது அந்த டிக்கெட் பரிசோதகர் வந்தே பாரத் ரயிலில் இருப்பவை தானியங்கி கதவுகள். அவற்றை நாமாக திறக்க இயலாது. ரயில் நிலையம் வரும்போது தாமாகவே திறந்து குறிப்பிட்ட நேரத்தில் மூடிக் கொள்ளும் என்று எடுத்துரைத்திருக்கிறார்.

இதனையறிந்த அந்த நபர் அதிர்ந்து போனார். ரயில் அடுத்ததாக விஜயவாடாவில் நிற்க டிக்கெட் எடுக்காமல் செல்ஃபிகாக ஏறிய அந்த நபர் 159 கி.மீ பயணம் செய்ய நேர்ந்தது. ரயில்வே ஊழியர்கள் அந்த நபருக்கு தகுந்த அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். இதனால் பார்வையாளர்கள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்கள் ரயிலில் ஏற வேண்டாம் என்று எச்சரிக்கிறோம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயிலை பார்க்கவும் அதனுள் படம் பிடித்துக் கொள்ளவும் நிறைய பேர் இதுபோல் வரும் நிலையில் இனி வந்தே பாரத் ரயில் வந்தவுடன் பயணிகள் அல்லாது மற்றவர்கள் அந்த ரயிலில் ஏற வேண்டாம் என்பது தொடர்பான அறிவிப்புகள் அந்தந்த ரயில் நிலையங்களில் வெளியிடப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE