“நீங்கள் என் தலைமையாசிரியர் இல்லை; நான் மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்” - ஆளுநருக்கு எதிராக கேஜ்ரிவால் ஆவேசம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “நீங்கள் (துணைநிலை ஆளுநர்) என்னுடைய தலைமையாசிரியர் இல்லை. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்” என்று டெல்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாகப் பேசினார்.

பள்ளி ஆசிரியர்களைப் பயிற்சிக்காக பின்லாந்து அனுப்ப டெல்லி அரசு திட்டமிட்டிருந்தது. மாநில அரசின் இந்த முடிவில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தகாகக் கூறப்படுகிறது. இந்த விவாகரம் ஆளுநர் - முதல்வருக்கு இடையேயான மோதல் போக்கின் சமீபத்திய விஷயமாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, டெல்லி அரசின் முடிவில் ஆளுநர் தலையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். டெல்லி சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பேரணி நடந்தது.

இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக செவ்வாய்கிழமை கூடியது. பேரவையில் பேசிய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பின்லாந்து சென்று பயிற்சி பெறும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் குறித்து பேசினார். அந்தத் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் அனுப்பிய பதிலை பேரவையில் வாசித்துப் பேசிய முதல்வர் கேஜ்ரிவால் கூறியது: “இந்தத் திட்டத்தில் தொழிலாளர் மற்றும் பயிற்சி துறையின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று ஆளுநர் கேட்டுள்ளார். ஆசிரியர்களை பயிற்சிக்காக பல்கலைகழகங்கள் வெளிநாடு அனுப்பும் திட்டங்களில் நடைமுறை என்ன? அதில் இதுவரை என்ன இலக்கு எட்டப்பட்டுள்ளது?

யார் இந்த துணைநிலை ஆளுநர்? அவர் நம் தலை மீது அமர்ந்துகொண்டு இருக்கிறார். நமது குழந்தைகள் எவ்வாறு படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு இவர் யார்? இவர்கள் நமது குழந்தைகளை படிக்க விடாமல் செய்துள்ளனர். நம்மைத் தடுப்பதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. நாளை நாமும் மத்திய அரசில் ஆட்சிக்கு வரலாம். அப்போது நமது அரசு மக்களைத் துன்புறுத்தாது.

என்னுடைய ஆசிரியர்கள் கூட எனது வீட்டுப் பாடங்களை, துணைநிலை ஆளுநர் பார்ப்பது போல சரிபார்த்ததில்லை. இவர் எனது கையெழுத்து, எழுத்துப் பிழை ஆகியவை குறித்து குற்றம் சுமத்துகிறார். இவர் என்னுடைய தலைமையாசிரியர் இல்லை. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். நான் அவரிடம் (துணைநிலை ஆளுநர்) "திட்டத்தின் பயன்பாட்டுச் செலவு குறித்து ஆய்வு செய்யச் சொல்ல நீங்கள் யார்? மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள்" என்றேன். அதற்கு அவர் "குடியரசுத் தலைவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்" என்றார். அதற்கு நான், "பிரிட்டிஷார் வைஸ்ராயைத் தேர்ந்தெடுத்தனர். வைஸ்ராய்கள், முட்டாள்களான இந்தியர்களுக்கு ஆட்சி செய்யத் தெரியாது என்றனர். அதேபோல் இப்போது நீங்கள் (துணைநிலை ஆளுநர்) முட்டாள்களான டெல்லிவாசிகளுக்கு ஆட்சி செய்யத் தெரியாது என்று கூறுகிறீர்கள்" என்றேன்.

ஆளுநருடனான ஒரு சந்திப்பில் அவர் என்னிடம், "டெல்லியின் உள்ளாட்சித் தேர்தலில், அவரால்தான் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. அவர் இல்லையென்றால் 20 இடங்களில் கூட அக்கட்சி வெற்றி பெற்றிருக்க முடியாது. வரும் பொதுத்தேர்தலிலும் துணைநிலை ஆளுநரால் டெல்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்" என்று கூறினார்.

துணைநிலை ஆளுநருக்கு சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது. காவல் துறை, நிலம், பொது ஆணைகளில் துணைநிலை ஆளுநருக்கு திரும்பப்பெறும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது” என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசினார். மேலும், வெளிநாடுகளில் படிக்கும் பாஜக அமைச்சர்கள், எம்பிகள், எம்எல்ஏக்களுடைய குழந்தைகளின் பட்டியலை அவர் பேரவையில் காண்பித்து, “அவர்களின் குழந்தைகள் நல்ல கல்வியை பெறுகின்றனர்” என்றார்.

முன்னதாக, திங்கள்கிழமை துணைநிலை ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆசிரியர்கள் வெளிநாடு சென்று பயிற்சி பெறுவதை நான் தடுக்கவில்லை. ஆசிரியர்களுக்கு உள்நாட்டிலேயே பயிற்சி அளிப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். மேலும், “எந்த ஒரு அறிக்கையும் தவறாக புரிந்து கொள்ளவும், எடுத்துச் செல்லப்படவும் வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்