புரி ஜெகந்நாதர் கோயிலில் எலித்தொல்லை

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே புரி நகரில் அமைந்துள்ளது ஜெகந்நாதர் கோயில். இங்கு எலித் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அதனால் மூலவர் சிலைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதுஎன்றும் சேவார்த்திகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சத்யநாரா யணன் புஷ்பலக் என்ற சேவார்த்தி கூறியதாவது:

மூலவர் சிலைகளுக்கு ஆபத்து

கர்ப்பக்கிரகத்தில் உள்ள ஜெகந்நாதர், பாலபத்திரர், சுபத்திரை சிலைகள் மரத்தால் ஆனவை. சமீப காலமாக கோயிலுக்கு கூட்டம் கூட்டமாக எலிகள் வந்து கொண்டிருக்கின்றன. சுவாமி சிலைகளுக்கு உடுத்தும் ஆடைகளையும், பூமாலைகளையும் எலிகள் கடித்து நாசம் செய்கின்றன. மேலும் கடவுளர்களின் சிலையில் உள்ள முகத்தையும் அவை நாசம் செய்கின்றன. இதனால் மூலவர் சிலைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பாகபன் பண்டா என்ற சேவார்த்தி கூறும்போது, “கரோனா பெருந்தொற்று காலத்தில் கோயில் மூடப்பட்டிருந்தபோது பராமரிக்க முடியாமல் போய் விட்டது. இதனால் எலிகள் பெருத்துவிட்டன. அதிக அளவில் எலிகள் இருப்பதால் அவை கோயிலை நாசம் செய்து வரு கின்றன” என்றார்.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா சாஹு கூறும்போது, “இந்தபிரச்சினை எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இந்த எலித்தொல்லையை ஒழிக்க முன்னேற்பாடுகள் எடுத்து வருகிறோம். தற்போது எலிகளை பொறிவைத்துப் பிடித்து அவற்றை வெகுதூரம் எடுத்துச் சென்று வெளியில் விட்டுவிடுகிறோம். எலிகளைக் கொல்வதற்கு இங்கு விஷம் வைப்பதில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE