புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? - இப்போது பார்ப்போம்.
புள்ளி விவரங்கள் அளிப்போர் யார்?: நாடாளுமன்றத்தில் நமது மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளி விவரங்களை பகிரும் முன் அந்த புள்ளிவிவரங்களை அளிப்போர் யார் என்பது குறித்து பார்ப்பது முக்கியம். நாடாளுமன்றத்தில் எம்.பிக்களின் செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை பி.ஆர்.எஸ் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து சேகரித்து அவற்றை இணையத்தில் (www.prsindia.org) பதிவேற்றி வருகிறது.
நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிந்ததும் பி.ஆர்.எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளைக் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் அமைப்பின் நிறுவனத் தலைவர் சீனிவாசன், ''நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து பாயிண்ட் ஃபவுண்டேஷன் அமைப்பு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. ஆய்வு செய்வதோடு, சிறப்பாக பணியாற்றிய உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் சன்சத் ரத்னா (Sansad Ratna Award) எனும் விருதினையும் வழங்கி கவுரவித்து வருகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் 86 உறுப்பினர்கள் இவ்வாறு கவுரவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அவர்களின் நாடாளுமன்ற செயல்பாடுகளின் அடிப்படையில் சிவில் சமூகத்தால் வழங்கப்படும் ஒரே விருது இதுதான். இந்தியா புக் ஆஃப் ரிகார்ட்ஸால் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.
செயல்பாடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பிரச்சினை குறித்து அவையில் தாங்களே எழுப்பி பேசும் சுயமுயற்சி விவாதங்கள் (Initiated debates), அவையில் கொண்டு வரும் தனிநபர் மசோதாக்கள், அவையில் எழுப்பப்படும் கேள்விகள் ஆகிய 3 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்களின் செயல்பாடுகள் மதிப்பிடப்படுகின்றன. இந்த மூன்றின் கூட்டுத் தொகையே புள்ளிகளாக குறிப்பிடப்படுகின்றன. முதலில் தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து பார்ப்போம்.
அதிக புள்ளிகள் பெற்றவர்கள்: தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களில் தருமபுரி எம்.பி.செந்தில் குமார் (திமுக) 453 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். தென்காசி எம்.பி தனுஷ்குமார் 409 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
அதிக கேள்விகளை எழுப்பியவர்கள்: மக்களவையில் அதிக கேள்விகளை எழுப்பியதில் செந்தில்குமார் முதலிடத்தில் உள்ளார். இவர் 384 கேள்விகளை எழுப்பியுள்ளார். இவரை அடுத்து 375 கேள்விகளுடன் தனுஷ்குமார் இரண்டாம் இடத்தில் உள்ளார். இருவருமே இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்று பணியாற்றியுள்ளனர்.
சுயமுயற்சி விவாதங்கள்: தேனி எம்.பி ரவீந்திரநாத் 97 சுயமுயற்சி விவாதங்களில் (Initiated debates) பங்கேற்று தமிழக எம்.பிக்களில் விவாதங்களில் முதலிடம் பெற்றுள்ளார். 66 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்று தருமபுரி எம்.பி செந்தில்குமார் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
தனிநபர் மசோதாக்கள்: சென்னை தெற்கு தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் 8 தனிநபர் மசோதாக்களை அறிமுகம் செய்து தமிழக எம்.பிக்களில் தனிநபர் மசோதா பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். 3 தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்து இருவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். ஒருவர் தருமபுரி எம்.பி செந்தில் குமார். மற்றொருவர் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி.
இதுவரை, தமிழக மக்களவை உறுப்பினர்களில் மூன்று பிரிவுகளிலும் முதல் இரண்டு இடத்தில் இருந்தவர்கள் குறித்து பார்த்தோம். அடுத்ததாக, கடைசி இரண்டு இடத்தில் உள்ளவர்கள் குறித்து பார்ப்போம்.
குறைந்த புள்ளிகள் பெற்றவர்கள்: தமிழக எம்.பிக்களில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்(திமுக) 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறார். திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஜெயகுமார்(காங்கிரஸ்) 34 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு முந்தைய இடத்தில் இருக்கிறார்.
குறைந்த கேள்விகள் பிரிவு: தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், 2019ல் இருந்து இதுவரை ஒரு கேள்வியையும் எழுப்பவில்லை. திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஜெயகுமார் 9 கேள்விகளை எழுப்பி கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் உள்ளார்.
சுயமுயற்சி விவாதங்கள்: தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 4 சுயமுயற்சி விவாதங்களில்(Initiated debates) பங்கேற்று தமிழக எம்.பிக்களில் விவாதங்களில் கடைசி இடம் பிடித்துள்ளார். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் 5 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்று கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் உள்ளார்.
தனிநபர் மசோதாக்கள்: மக்களவையில் ஒரு தனிநபர் மசோதாகூட கொண்டுவராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இருக்கிறார்கள். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் சிகாமணி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பி. ரவீந்திரநாத் குமார், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. சண்முகசுந்தரம், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேலுசாமி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.செல்லகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஜெயகுமார், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
மாநிலங்களவையில் செயல்பாடு: அடுத்ததாக, தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கடந்த 2022ம் ஆண்டில் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது குறித்த புள்ளி விவரங்களைப் பார்ப்போம். தமிழகத்திலிருந்து 18 எம்.பிக்கள் மாநிலங்களவையில் பணியாற்றுகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதாலும், இவர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தங்களுடைய 6 ஆண்டு கால பதவிக் காலம் முடிந்தபின் சுழற்சி முறையில் ஓய்வு பெறுவார்கள் என்பதாலும், கடந்த 2022ம் ஆண்டில் இவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது குறித்து மட்டும் தற்போது பார்க்க இருக்கிறோம்.
அதிக புள்ளிகள் பெற்றவர்கள்: கடந்த 2022ம் ஆண்டில், மாநிலங்களவையில் தமிழ்நாட்டு உறுப்பினர்களில் கனிமொழி என்.வி.என்.சோமு (திமுக) 136 புள்ளிகளுடன் (சுயமுயற்சி விவாதங்கள் + தனிநபர் மசோதாக்கள் + கேள்விகள்) முதல் இடத்தில் இருக்கிறார். 131 புள்ளிகளுடன் திமுகவின் வில்சன் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
அதிக கேள்விகளை எழுப்பியவர்கள்: திமுகவைச் சேர்ந்த கனிமொழி என்விஎன் சோமு 125 கேள்விகளை எழுப்பி கேள்விகள் பிரிவில் முதலிடத்தில் இருக்கிறார். 115 கேள்விகளை எழுப்பி திமுகவைச் சேர்ந்த கே.ஆர்.என். ராஜேஷ்குமார் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
சுயமுயற்சி விவாதங்கள்: அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை 36 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்று இந்த பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் ஜி.கே.வாசன் உள்ளார். இவர், 27 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.
தனிநபர் மசோதாக்கள்: திமுகவைச் சேர்ந்த வில்சன் 3 தனிநபர் மாசோதாக்களை அறிமுகம் செய்து இந்த பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். ஒரு தனிநபர் மசோதாவைக் கொண்டு வந்த திருச்சி சிவா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
மாநிலங்களவையில் சிறப்பாக செயல்பட தவறியவர்கள்: இதுவரை, தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களில் சிறப்பாக செயல்பட்டவர்கள் குறித்து பார்த்தோம். சிறப்பாக செயல்பட தவறியவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களில் 4 பேரின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் செயல்படவே இல்லை என்பதை புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு அவையில் எவ்வித கேள்வியையும் கேட்கவில்லை; விவாதத்தையும் எழுப்பவில்லை; தனிநபர் மசோதாவையும் கொண்டுவரவில்லை. அந்த 4 பேர் யார் என்பது குறித்து தற்போது பார்ப்போம். அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம், என். சந்திரசேகரன், ஆர். தர்மர், திமுகவைச் சேர்ந்த பி. செல்வராசு ஆகியோரே அந்த நால்வர். இவர்களை கடைசி இடத்தில் இருப்பவர்கள் என்று குறிப்பிட்டால், கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் இருப்பவர் ப. சிதம்பரம். இவர் 4 சுயமுயற்சி விவாதங்களை மட்டுமே எழுப்பி உள்ளார். அவையில் கேள்வி எதையும் கேட்கவில்லை; தனிநபர் மசோதாவையும் கொண்டுவரவில்லை.
முழுமையான பட்டியல்: > தமிழக மக்களவை எம்.பி.க்களின் செயல்பாடு | தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களின் செயல்பாடு
முக்கிய செய்திகள்
இந்தியா
36 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago