நீதிபதிகள் நியமன விவகாரம் | உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீதிபதிகள் நியமன விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூடுக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதி உள்ளார்.

அதில், ''உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட கொலிஜியம் அமைப்பின் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில், வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புணர்வையும் ஊக்குவிக்க அரசு விரும்புகிறது. இதற்காக, கொலிஜியம் குழுவில் அரசு பிரதிநிதிகள் சேர்க்கப்படுவதை அரசு பரிந்துரைக்கிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ''தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தபோது, அது ஒரு உத்தரவை பிறப்பித்தது. கொலிஜியத்தின் செயல்முறை மாற்றப்பட வேண்டும் என்பதுதான் அது. உச்ச நீதிமன்றத்தின் அந்த உத்தரவை பின்பற்றியே, தற்போது தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.

கொலிஜியம் முறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பேற்கும் முறை இல்லை என்று ஒரு மாதத்திற்கு முன்பு கிரண் ரிஜிஜூ வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்படும் பெயர்களைத்தான் அரசு ஏற்க வேண்டும் என்றால், அதில் அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது என அவர் கேள்வி எழுப்பி இருந்தார். நாடாளுமன்றத்திற்கு இருக்கும் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நீதித்துறை மதிக்க வேண்டும் என்றும் அதில் தலையிடுவதற்கு நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் சமீபத்தில் கூறி இருந்தார். இந்த பின்னணியில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE