தமிழ்நாட்டையும் அசாமையும் இணைக்கும் மிக நீண்ட தூர விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை வாரத்துக்கு 4 நாட்கள் இயக்க முடிவு

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: தமிழ்நாட்டையும் வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கும் விவேக் எக்ஸ்பிரஸை மே மாதத்திலிருந்து வாரம் 4 நாட்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விவேக் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி முதல் அசாம் மாநிலம் திப்ரூகர் வரையில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் 9 மாநிலங்கள் வழியாக 4,189 கிமீ தூரம் பயணிக்கிறது. இந்தத் தூரத்தை 74 மணி 35 நிமிடங்களில் கடக்கிறது. மொத்தம் 59 இடங்களில் நின்று செல்கிறது. அந்த வகையில் இந்தியாவின் மிக நீண்ட தூரமும் மிக நீண்ட நேரமும் பயணிக்கும் ரயில் இதுவாகும்.

தற்போது விவேக் எக்ஸ்பிரஸ் வாரத்துக்கு 2 நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைக் கணக்கில் கொண்டு இந்த ரயிலை வாரம் 4 நாட்கள் இயக்க வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலம் முடிவு செய்துள்ளது. வரும் மே மாதம் முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

தற்போது இந்த ரயில் திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரிக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படுகிறது.

இந்நிலையில் மே 7-ம் தேதி முதல் கூடுதலாக செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையிலும் இயக்கப்பட உள்ளது. அதேபோல்தற்போது கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகருக்கு வியாழன்,ஞாயிற்றுக்கிழமையில் இயக்கப்படுகிறது. மே 11-ம் தேதி முதல்கூடுதலாக திங்கள் மற்றும் புதன்கிழமையிலும் இயக்கப்பட உள் ளது. பயண நேரத்திலும், ரயில் நிற்கும் இடங்களிலும் மாற்றமில்லை என்று வடகிழக்கு ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது.

இந்த ரயிலில் 22 பெட்டிகள் உள்ளன. ஏசி 2 டயருக்கு ரூ.4,450, ஏசி 3 டயருக்கு ரூ.3,015, ஏசி வசதி இல்லாத படுக்கை வகுப்புக்கு ரூ.1,185 டிக்கெட் கட்டணம் ஆகும்.

விவேக் எக்ஸ்பிரஸ் சேவை 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம்தொடங்கப்பட்டது. 11 ஆண்டுகளாக சேவை வழங்கிவரும் விவேக் எக்ஸ்பிரஸ் தென்னிந்தியாவையும் வடகிழக்குப் பிராந்தியத்தையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE