’பீஷ்மரைப் போன்ற தீர்க்கமானவர்கள் நீங்கள்...’ - ராணுவ வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

By செய்திப்பிரிவு

உத்தராகண்ட்: பீஷ்மரைப் போன்ற தீர்க்கமானவர்கள் என்று ராணுவ வீரர்களைப் பாராட்டியுள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். ஆண்டுதோறும் ஜனவரி 14-ஆம் தேதியன்று முன்னாள் படைவீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

அப்போது அவர், "இந்திய புராணத்தில் பீஷ்ம பிதாமகனைப் போன்ற தீர்க்கமானவர் யாரும் இருக்க முடியாது. அவரைப் போன்ற முன்னாள் வீரர் யாருமில்லை. அவருடைய உறுதி இரும்பைப் போன்றது. இன்றும் கூட யாரேனும் தீர்க்கமான சத்தியத்தை மேற்கொள்ளும்போது அது பீஷ்மரின் உறுதிக்கு ஒப்பிடப்படுகிறது. அந்த சத்தியத்தை பீஷ்ம பிரயத்தனம் எனக் கூறுகின்றனர். அதேபோல் தான் நம் இளம் ராணுவ வீரர்களும் உறுதியுடன் வாழ்வதில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை. மழையோ வெயிலோ ராணுவ வீரர்கள் தங்கள் பணியில் தவறாமல் முன்னுதாரணமாக இருக்கின்றனர். நீங்கள் மற்றவர்களுக்கு தியாகத்தின், அன்பின் அடையாளமாக இருக்கின்றீர்கள்.

எப்போதெல்லாம் இந்த தேசம் துணிவான வீரர்களின் தேவையை உணர்ந்துள்ளதோ அப்போதெல்லாம் உத்தராகண்ட் வீரர்கள் முன்னால் வந்துள்ளனர். அவர்களின் ஈடு இணையற்ற துணிச்சல் தேசத்தின் ஒற்றுமையைப் பேண பெரும் பங்கு வகித்திருக்கிறது" என்றார். இன்று நாடு முழுவதும் ஜுன்ஜுனு, ஜலந்தர், பனாகர், புது டெல்லி, டேராடூன், சென்னை, சண்டிகர், புவனேஸ்வர், மும்பை ஆகிய இடங்களில் படைவீரர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

முதன்முதலாக 1953-ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியன்று இந்திய ராணுவத்தின் முதல் கமாண்டர் இன் சீஃப் ஜெனரல் கரியப்பா ஓய்வு பெற்றார். அதனை நினைவுகூரும் வகையில் கடந்த 2016-ஆம் ஜனவரி 14 ஆம் தேதி முதல் முன்னாள் படைவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE