“அரசியலில் எப்போதுமே வெற்றி, தோல்விகள் இருக்கும்” - ஜெய்ராம் ரமேஷ்

By செய்திப்பிரிவு

லுதியானா: அரசியல் என்பது சித்தாந்தம் சார்ந்தது என்றும், இதில் எப்போதுமே வெற்றியும் தோல்வியும் இருக்கும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பயணித்து வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், லுதியானாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பஞ்சாபிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரவேற்பு எங்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இது சிந்தாந்தத்திற்கான போராட்டம். இது நீண்ட காலத்திற்கு இருக்கும். தேர்தல் வரும். வெற்றியும் தோல்வியும் ஏற்றமும் இறக்கமும் தொடரும். அரசியல் என்பது தேர்தலுக்கானது மட்டுமல்ல; அது முக்கியமாக சிந்தாந்தத்திற்குமானது என தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் ட்வீட்: இதனிடையே, ராகுல் காந்தி விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், சிரமங்களில் இருந்து நாட்டை விடுவிக்கவும், எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்காகவும் தேவையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பை உணர்ந்து போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

யாத்திரை தற்காலிகமாக ஒத்திவைப்பு: இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் திடீர் மறைவை அடுத்து, சனிக்கிழமை யாத்திரை நிறுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், ஜலந்தரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE