விருதுநகருக்கு கூடுதல் தேங்காய் கொள்முதல் நிலையங்கள்: தென்காசி எம்.பி. தனுஷ்குமார் வலியுறுத்தல்

By அ.கோபால கிருஷ்ணன்

ஶ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்திற்கு கூடுதல் தேங்காய் கொள்முதல் நிலையம் தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பாரம்பரிய உள்ளூர் ரக பயிர்கள் கண்காட்சி மற்றும் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. தென்காசி எம்.பி தனுஷ் குமார் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன் வரவேற்றார்.

வேளாண் மற்றும் உழவர் நலத் துறை சார்பில் தமிழகத்தில் பாரம்பரிய மற்றும் உள்ளூர் ரகத்தைச் சேர்ந்த பயிர் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் பாரம்பரிய ரகங்களின் சாகுபடி விற்பனை கண்காட்சி மற்றும் மேம்பாட்டு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள பாரம்பரிய ரகங்கள், மத்திய மாநில அரசின் சிறப்பு திட்டங்கள், விதை உற்பத்தி மற்றும் அங்ககச் சான்று, பாரம்பரிய கால்நடைகள், பாரம்பரிய ரகங்களை மதிப்பு கூட்டுதல் ஆகியன குறித்து வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அலுவலர்கள் கருத்தரங்கில் எடுத்துரைத்தனர்.

வேளாண் கண்காட்சியை தொடக்கி வைத்து தனுஷ்குமார் எம்.பி பேசுகையில், ''விவசாயிகளுக்கு வருமானம் வருகிறதே தவிர லாபம் கிடைப்பதில்லை. விவசாயிகள் படும் கஷ்டத்தை யாரும் சிந்திப்பதில்லை. அரசு நெல் கொள்முதல் நிலையம் திறந்ததிற்கு பின் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கிறது. அதிலும் விவசாயிகளின் ஏழ்மையை பயன்படுத்தி வியாபாரிகள் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்தில் மட்டுமே தேங்காய் கொள்முதல் நிலையம் உள்ளது. தமிழகத்தில் எங்கும் இல்லாத சாபக்கேடாக விருதுநகர் மாவட்டத்தில் தான் சந்தையில் தேங்காய் விற்கும் போது 15 காய் கழிவாக பெறப்படுகிறது. இதை தவிர்க்க கூடுதல் தேங்காய் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை வேண்டும். அதிக சந்தை வாய்ப்புகள் வரும் போது வியாபாரிகள் கழிவை குறைத்து தான் ஆக வேண்டும்.

இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும். விவசாயிகள் பிரச்சினையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் தீர்வு கிடைக்கும். வேளாண் மாணவர்கள் படித்து முடித்து வேலைக்கு செல்ல நினைக்காமல், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு முன் வர வேண்டும்'' என்றார்.

மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி, ஒன்றிய குழு தலைவர்கள் ஆறுமுகம், சிந்து முருகன் மற்றும் வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE