வங்கதேசத்திலிருந்து மிசோரமில் குவியும் அகதிகள் - எல்லையில் உணவு, குடிநீர் இன்றி பரிதவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மியான்மர், வங்கதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் குவிந்து வருகின்றனர். தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கதேச அகதிகள் மிசோரமில் தஞ்சம் கோரி எல்லையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் உணவு, குடிநீர் இன்றி பரிதவித்து வருகின்றனர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் குகி - சின் என்ற பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் இந்த பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மரிலும் இதே பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் கணிசமாக வாழ்கின்றனர்.

வங்கதேசத்தில் சுமார் 40 லட்சம், மியான்மரில் சுமார் 4 லட்சம் குகி -சின் இன மக்கள் உள்ளனர். இரு நாடுகளிலும் இந்த இன மக்கள் கொடூரமான அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றனர்.

40,000 மியான்மர் அகதிகள்: மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 68 சதவீதம் பேர் பாமர் இன மக்கள் ஆவர். நாட்டை ஆளும் மூத்த ராணுவ தளபதிகள் இந்த இனத்தை சேர்ந்தவர்கள். மியான்மர் ராணுவத்துக்கு எதிராக ரோஹிங்கியா முஸ்லிம்களும், புத்த மதத்தைச் சேர்ந்த அரக்கன் சமுதாய மக்களும் தனித்தனியாக ஆயுதமேந்தி போராடி வருகின்றனர்.

இந்த சூழலில் மியான்மரின் சின் மாகாணத்தில் வசிக்கும் குகி - சின் இன மக்களுக்கு எதிராக மியான்மர் ராணுவமும் அரக்கன் சமுதாயத்தை சேர்ந்த அரக்கன் ஆர்மியும் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் மியான்மரில் இருந்து சுமார் 40,000 குகி - சின் இன மக்கள் அகதிகளாக மிசோரமில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களில் 14 எம்எல்ஏக்களும் அவர்களின் குடும்பங்களும் அடங்கும். மிசோரமின் 11 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 156 முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து மிசோரம் அரசு அதிகாரிகள் கூறும்போது, “கடந்த 2021-ம் ஆண்டு முதல் மியான்மரில் இருந்து 10,047 பெண்கள், 11,798 குழந்தைகள் உட்பட 40,000-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக மிசோரமில் நுழைந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம், கல்விக்காக பெரும் தொகை செலவிடப்படுகிறது. மாநில அரசு ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கும் நிலையில் அகதிகளால் கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தனர்.

வங்கதேசத்தின் சிட்டாகாங் மலைப்பகுதியில் புத்த மதம், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் குகி - சின் இனத்தைச் சேர்ந்த சுமார் 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தனி மாகாண கோரிக்கையை வலியுறுத்தி குகி -சின் தேசியராணுவம் என்ற அமைப்பு ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்புக்கும் வங்கதேச ராணுவத்துக்கும் இடையே மிகப் பெரியளவில் சண்டை நடைபெற்று வருகிறது.

இதன்காரணமாக அந்த இன மக்கள் இந்தியாவின் மிசோரம் மாநில எல்லைப் பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். எல்லையோர வனப்பகுதிகளில் உணவு, குடிநீர் இன்றி அவர்கள் தவிக்கின்றனர்.

மிசோரம் மாநிலத்தின் பார்வா கிராமத்தின் அருகே சுமார் 150 வங்கதேச அகதிகள் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் உணவு வழங்கி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு வங்கதேச கர்ப்பிணிக்கு பிரசவவலி ஏற்பட்டது. பிஎஸ்எப் படையை சேர்ந்த டாக்டர்கள், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

அகதிகள் பிரச்சினை குறித்து மிசோரமை சேர்ந்த எம்.பி. வன்லாவேணா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "எங்கள் இனத்தை சேர்ந்த குகி - சின் மக்கள் வங்கதேச ராணுவத்தால் தாக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியாவுக்குள் நுழைய பிஎஸ்எப் அனுமதி வழங்க வேண்டும். எல்லையில் தற்போது சுமார் 1,000-க்கும் மேற்பட்ட அகதிகள் பரிதவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பிஎஸ்எப் படைக்கு உரிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

வங்கதேச அகதிகள் மிசோரமில் நுழைய பிஎஸ்எப் வீரர்கள் அனுமதி மறுப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் வங்கதேச அகதிகளில் முதியவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதை கண்டித்து மிசோரம் முழுவதும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம், பேரணி நடைபெற்றது. இதில் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “வங்கதேசம், மியான்மர் நாடுகளின் எல்லைப் பகுதியில் மிசோரம் அமைந்துள்ளது. இரு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான குகி - சின் இன மக்கள் மிசோரமில் குவிந்து வருகின்றனர். மியான்மரை சேர்ந்த 40,000-க்கும் மேற்பட்ட மக்கள்மிசோரமில் அகதிகளாக உள்ளனர். தற்போது வங்கதேச அகதிகளும் மிசோரமில் தஞ்சம் கோருவதால் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அகதிகள் பிரச்சினைக்கு அரசியல்ரீதியாக தீர்வுகாணும்படி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசை வலியுறுத்தி வருகிறோம். இப்போதைய நிலையில் எல்லையில் முகாமிட்டிருக்கும் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்து வருகிறோம்" என்று தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE