“மத்திய அரசின் பக்கம் நிற்க வேண்டும்” - குடிமைப்பணி தேர்வர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

By செய்திப்பிரிவு

சென்னை: “மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்தால், நீங்கள் மத்திய அரசின் பக்கம் நிற்க வேண்டும்” என்று குடிமைப்பணி தேர்வர்களுடனான கலந்துரையாடலின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 150 பேருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின்போது, மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஆளுநர் பதிலளித்தார். அதன் விவரம்:

மத்திய அரசின் பக்கம் நிற்க வேண்டும்: “மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்தால் நீங்கள் மத்திய அரசின் பக்கம் நிற்க வேண்டும். இதில் சந்தேகமே இருக்கக் கூடாது.

இந்தி கற்க வேண்டும்: நம்மால் எத்தனை மொழியை கற்க முடியுமோ அத்தனை மொழியை கற்க வேண்டும். கூடுதலாக ஒரு மொழியை கற்பது என்பது நமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். அதிக மொழிகளை கற்கும்போது அதிக மக்களோடு நாம் தொடர்பில் இருக்க முடியும். நமது நாட்டில் அதிக மக்கள் பேசும் மொழி இந்தி. அவ்வாறு அதிக மக்களால் பேசப்படும் மொழியாக இந்தி இருக்கும் வரை நாம் கூடுதலாக ஒரு மொழி கற்பது நமக்கு நல்லது.

ஒன்றிய அரசு என அழைப்பது தவறா? - ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறு இல்லை. ஆனால் அதை அரசியலாக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது. தனி நாகாலாந்து கேட்கும் நாகா குழுக்களின் எண்ணம் என்பது ஒட்டுமொத்த நாகா மக்களின் எண்ணம் இல்லை” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

தமிழ்நாடு என்று அழைப்பதைவிட தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE