புதுடெல்லி: ஜார்க்கண்டின் கிரிடி மலைப்பகுதியை சுற்றுலாத்தலமாக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த உத்தரவு, சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான ஜெயின் சமூகத்தினர் நடத்திய போராட்டத்திற்கான வெற்றியாக அமைந்துள்ளது.
ஜார்கண்டின் கிரிடி மாவட்டத்தின் 4,478 அடி உயரத்தில் அமைந்துள்ளது பாரஸ்நாத் மலை. சரணாலயப் பகுதியான இதில் சிறுபான்மை சமூகமான ஜெயின்களின் முக்கிய கோயில் அமைந்துள்ளது. சம்மத் ஷிகன்ஜி தீர்த் என்றழைக்கப்படும் இக்கோயில், ஜெயின் சமூகத்தினரின் 24 தீர்த்தங்கரர்களில் ஒருவரான பாசவநாத் எனும் பாரஸ்நாத்திற்கானது. இவர் 23 ஆவது தீர்த்தங்கர் என்பதால் அவரது புனிதக் கோயிலை ஜெயின் சமூகத்தினர் மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர். அவர்களின் பிரிவுகளான திகம்பரர் மற்றும் ஸ்வேதாம்பரர் என இருவருக்குமே பாரஸ்நாத் புனிதமானவர். அதேசமயம், இந்த பாரஸ்நாத் மலையும் அடர்ந்த அழகான பசும் சோலையுடன் வனப்பகுதியாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்டில் கடந்த ஆட்சியில் இருந்த பாஜக தலைமையிலான அரசு ஒரு முக்கிய முடிவு எடுத்திருந்தது. இதன் முதல்வர் ரகுபர் தாஸ், கடந்த 2019 இல் பாரஸ்நாத் மலையை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலச் சுற்றுலாத்தலமாக்க உள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால், அதற்கானப் பணிகள் எதுவும் துவக்கப்படாமல் இருந்தன. இப்பணிகளை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அம்மாநிலத்தை ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு தற்போது துவக்கியது.
இதற்கு ஜெயின் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு வரும் சுற்றுலாவாசிகளால் அப்பகுதியில் மது, மாமிசம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் அக்கோயிலின் புனிதம் கெட்டு விடும் என எழுந்த ஜெயினர் அஞ்சம் அதன் காரணம்.
தொடர்ந்து, ஜெயினர் கடந்த சில நாட்களாக டெல்லி, மும்பை, போபால், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பெரும் போராட்டங்கள் நடத்தினர். தமிழகம், புதுச்சேரியிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஜெயினர், ஜார்கண்ட் அரசை முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி நேற்று அமைதி பேரணி நடத்தினர்.
இதனிடையே, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை, ஜெயின் சமூகத்தை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் நேரில் சந்தித்தனர். இதையடுத்து மத்திய அரசு, ஜெயின் சமூகத்தினரின் புனிதத்தலத்தை சுற்றுச்சூழல் உணர்திறனாக மண்டல சுற்றுலாத்தலமாக மாற்றத் தேவையில்லை என முடிவு எடுத்துள்ளது.
மத்திய அரசு தனது முடிவை ஜார்கண்ட் அரசிற்கும் தெரிவித்து அங்கு பாரஸ்நாத் மலைப்பகுதியை சுற்றுலாத்தலமாக்கும் திட்டத்தை நிறுத்தும்படியும் அறிவுறுத்தி உள்ளது. இத்துடன், ஷிகன்ஜி தீர்த்தங்கரரின் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் மது அருந்துதல் மற்றும் அதன் விற்பனை நடவடிக்கைகளையும் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற கருத்தை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரான ஜி.கிஷன்ரெட்டியும் தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘ஜெயின் சமூகத்தினர் மனம் புண்படும் வகையில் எந்த நடவடிக்கையும் ஜார்க்கண்டில் எடுக்கக் கூடாது. இவர்களது புனிதத்தலங்களில் ஒன்று அமைந்துள்ள இடத்தை மாநில அரசு பாதுகாக்க வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு நன்றி: இதன்மூலம், ஜெயின் சமூகத்தினர் நாடு முழுவதிலும் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றிருப்பதாகவும் கருதப்படுகிறது. மத்திய அரசின் அறிவிப்பிற்கு பின் ஜெயின் சமூகம் சார்பில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்து அறிக்கைகள் வெளியாகத் துவங்கி உள்ளன.
ஜெயின் துறவி உயிரழப்பு: ஜார்க்கண்ட் அரசின் நடவடிக்கையை எதிர்த்து ஜெய்ப்பூரில் ஜெயின் சமூகத்தின் துறைவியான சுக்ய சாகர் மஹராஜ் (72), கடந்த டிசம்பர் 25 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி இருந்தார். இதனால் அவர் கடந்த டிசம்பர் 30 பரிதாபமாக உயிரிழந்தார்.
பொதுப்பட்டியலில் வனம்: நாடு முழுவதிலும் உள்ள வனப்பகுதிகள், பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதன் காரணமாக, தனது மாநிலங்களில் அமைந்த வனங்களில் எந்த ஒரு திட்டத்தை அமலாக்கவும் அங்கு ஆளும் அரசு, மத்திய அரசிடம் அனுமதி பெறுவது அவசியம் என்பது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago