வந்தே பாரத் ரயில் மீது பிஹாரில் கல்வீச்சு - பாஜகவினருக்கு முதல்வர் மம்தா எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் ஹவுரா - நியூ ஜல்பைகுரி இடையே புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கடந்த செவ்வாய்க்கிழமை கல்வீச்சு நடத்தப்பட்டது. அதற்கு முந்தைய நாளும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசப்பட்டது. இதற்கு பாஜக.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

‘‘பிஹார் மாநிலம் மங்குர்ஜன் என்ற இடத்தில் ரயில் மீது கல்வீசிய 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்கள் கிழமை நடந்த கல்வீச்சு மேற்குவங்கத்தின் மால்டாவில் நடந்துள்ளது. பனிமூட்டம் காரணமாக சிசிடிவி கேமரா பதிவில் எதுவும் தெரியவில்லை’’ என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அளித்த பேட்டியில், ‘‘வந்தே பாரத் ரயில் மீதான தாக்குதல் மேற்குவங்கத்தில் நடைபெறவில்லை. பிஹாரில் நடந்ததை ரயில்வே சிசிடிவி கேமிரா காட்டுகிறது. வேண்டுமென்றே பொய் செய்தி பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வந்தே பாரத் ரயிலில் என்ன இருக்கிறது? பழைய ரயிலுக்கு, புதிதாக வண்ணபூச்சு பூசியுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE