புதுடெல்லி: தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்வதில் மக்களின் பங்களிப்பு அவசியம் என்று மாநில நீர்வளத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய ஜல் சக்தி துறை சார்பில் மாநில நீர்வளத் துறை அமைச்சர்களின் முதல் அகில இந்திய மாநாடு மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது:
நாட்டின் தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்ய அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானதாகும். இதை கருத்தில் கொண்டு ‘தண்ணீர் தொலைநோக்கு 2047’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் மாநாடு நடைபெறுகிறது. தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெப்போதும் இல்லாத வகையில் பன்மடங்கு முதலீடுகளை அதிகரித்து வருகிறோம். நாடு முழுவதும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நமது அரசியல் சாசனத்தில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் தண்ணீர் வருகிறது. எனவே அந்தந்த மாநில அரசுகள் தண்ணீரை சேமிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
» IND vs SL 2-வது டி20 | அதிரடியால் ஆறுதல் தந்த அக்சர்: 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை
அரசின் முயற்சி, திட்டங்களால் மட்டும் தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. இதில் மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள், பிரச்சாரங்களில் பொதுமக்கள், சமூக அமைப்புகளை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும்.
மக்களின் பங்களிப்பு மூலம் ஓர் அரசு திட்டம் மாபெரும் வெற்றி அடைந்ததற்கு ‘தூய்மை இந்தியா' திட்டம் மிகச் சிறந்த முன்னுதாரணம் ஆகும். இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் மக்களால்தான் திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதேபோல தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களிலும் மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும்.
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின நிறைவையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் இதுவரை 25,000 ஏரி, குளங்கள் வெட்டப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தாமாக முன்வந்து ஏரி, குளங்களை வெட்ட உதவுகின்றனர். இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ள மக்களை மனதார பாராட்டுகிறேன்.
தண்ணீர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை, ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஒன்றிணைத்து தீர்வு காண வேண்டும். ஜியோ-சென்சிங், ஜியோ மேப்பிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும்.
அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீரை வழங்க ‘ஜல் ஜீவன் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் கிராம ஊராட்சி நிர்வாகங்கள், ‘ஜல் ஜீவன் திட்டத்துக்கு' தலைமை ஏற்க வேண்டுகிறேன்.
இயற்கை வேளாண்மை
தொழில் மற்றும் விவசாயத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த 2 துறைகளிலும் தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொழில் துறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அதிகம் பயன்படுத்தலாம்.
வேளாண் துறையில் இயற்கை வேளாண்மை, பல்வகை பயிர் சாகுபடியைப் பின்பற்றலாம். பிரதமர் வேளாண் நீர்பாசன திட்டத்தின்படி ஒரு துளி தண்ணீரில் அதிக பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 70 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் செய்யப்படுகிறது. நாடு முழுவதும் நுண்ணீர் பாசன திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. அடல் நிலத்தடி நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கால்வாய்க்கு பதிலாக குழாய் மூலம் தண்ணீரை கொண்டு செல்லும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
மழைநீர் சேகரிப்பு
‘ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்’ பிரசாரத்தை மத்திய ஜல் சக்தி துறை தொடங்கி உள்ளது. இந்த திட்டம் வெற்றி அடைய மாநில அரசுகள் அதிதீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago