டி ஷர்ட் விவகாரம் | ஏழை குழந்தைகள் கிழிந்த ஆடையுடன் இருப்பது உங்களுக்கு ஏன் தெரிவதில்லை? - ஊடகங்களுக்கு ராகுல் கேள்வி

By செய்திப்பிரிவு

பக்பத்(உத்தரப்பிரதேசம்): தற்போதைய குளிர் காலத்திலும் ஏழைக் குழந்தைகள் கிழிந்த ஆடையுடன் இருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஊடகங்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். பக்பத் என்ற இடத்தில் பேசிய அவர், ''இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது நான் டி ஷர்ட் அணிந்து கொண்டிருப்பது சர்ச்சையாக்கப்படுகிறது. ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் இந்த பனிக்காலத்திலும் கிழிந்த ஆடையுடன் இருக்கிறார்கள். அத்தகைய குழந்தைகளில் பலர் என்னோடு இந்த யாத்திரையில் பங்கேற்கிறார்கள். ஆனால், கடும் குளிரில் அதற்கேற்ற ஆடை இல்லாமல் அவர்கள் இருப்பது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்புவதில்லை. உண்மையான பிரச்சினை நான் டி ஷர்ட் அணிவது அல்ல. ஆனால், இந்த கடும் குளிரில் கதகதப்பான ஆடை அணிய வாய்ப்பில்லாமல் ஏழைக் குழந்தைகள் இருப்பதுதான் உண்மையான பிரச்சினை. ஊடகங்கள் ஏன் அது குறித்து பேசுவதில்லை.

கடந்த காலங்களில் ராணுவத்தில் சேர்பவர்கள் 15 ஆண்டு காலம் பணியாற்றுவார்கள். பிறகு ஓய்வூதியம் பெறுவார்கள். ஆனால், தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிவீர் திட்டத்தில் சேர்பவர்களுக்கு எந்த ஓய்வூதியமும் இல்லை. வெறும் 4 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அவர்கள் வெளியேற வேண்டும். அதன் பிறகு அவர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்க வேண்டும். இதுதான் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள அக்னிவீர் திட்டம். இதை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை அச்சுறுத்துகிறது மத்திய அரசு. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை புகைப்படம் எடுத்து அவர்களுக்கு இனி அரசு வேலையே கிடைக்காது என்ற நிலையை உருவாக்குகிறது அது. பாஜகவின் இந்த கொள்கை காரணமாக இளைஞர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள் என பலரையும் பாஜக அச்சுறுத்தி வருகிறது.'' என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE