ரூ.500, ரூ.1,000 பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது செல்லும்: உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசு கடந்த 2016-ல் மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று கூறிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அந்த நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் பலர் பாதிக்கப்பட்டதாகக் கூறி, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்த, நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியம் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்தனர். ஆனால், நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, சட்டத்தின் மூலமாக மத்திய அரசு நிறைவேற்றி இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, 4:1 என்ற விகிதாச்சாரத்தின்படி, மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லத்தக்கதே என்று அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் பண மதிப்பிழப்பு தொடர்பாக 6 மாதங்கள் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தியுள்ளது. எனவே, மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் குறைபாடு காண முடியாது. 2016 நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை முற்றிலும் நியாயமற்றது, ரத்து செய்யப்படக் கூடியது என்று கூறுவதை ஏற்க இயலாது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பின் பின்னணியில் இருந்த இலக்கு எட்டப்பட்டதா என்பது தற்போதைய முக்கியமான விவகாரம் அல்ல. அரசின் பொருளாதாரக் கொள்கை முடிவுகளில், நீதிமன்றம் தலையிட்டு கருத்துகூற முடியாது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து ரூ.500, ரூ.1,000 மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகளை சட்டப்பூர்வ பணமாக மாற்றிக்கொள்வதற்கு வழங்கப்பட்ட 52 நாள் காலஅவகாசம் போதுமானதே. எனவே, அதை நியாயமற்றது என்று கூற முடியாது. தற்போது அதற்கான காலஅவகாசத்தை நீட்டிக் கவும் முடியாது. 1978-ல் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு, பின்னர் கூடுதலாக 5 நாட்கள் மட்டுமே காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், நீதிபதி நாகரத்னா பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரானத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: பண மதிப்பிழப்பு முன்மொழிவு என்பது மத்திய அரசின் திட்டம். ரிசர்வ் வங்கியிடம் இதுகுறித்து நடத்திய ஆலோசனையில் வழங்கப்பட்ட கருத்தை, ஆர்பிஐ சட்டப்பிரிவு 26(2)-ன் கீழ் "பரிந்துரை" என்று கருத முடியாது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பொதுமக்களுக்கு மிகவும் கடினமான சூழ்நிலைகளை ஏற்படுத்தியது. இவ்வளவு தேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன், நாடாளுமன்றத்தில் அதுகுறித்த விவாதங்கள் நடத்தியிருக்க வேண்டும். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது அரசிதழ் மூலமாக அறிக்கை
வெளியிட்டு, நிறைவேற்றக் கூடியதல்ல. அதை சட்டத்தின் மூலமாக செய்திருக்க வேண்டும். இருப்பினும், அந்த நடவடிக்கையின் நோக்கத்தை குறை காண முடியாது. கருப்பு பண ஒழிப்பு, பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதைத் தடுத்தல் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இவ்வாறு தனது தீர்ப்பில் நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்