காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது வயதில் நேற்று காலமானார். குஜராத் தலைநகர் காந்திநகரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அரசு மரியாதை இல்லாமல், எளிமையான முறையில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
1923 ஜூன் 18-ம் தேதி குஜராத்தின் மெஹ்சானா மாவட்டம் விஸ்நகரில் பிறந்தவர் ஹீராபென். அருகில் உள்ள வட்நகரைச் சேர்ந்த தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடியை சிறுவயதிலேயே திருமணம் செய்தார்.
வட்நகர் ரயில் நிலையத்தில் தாமோதர் தாஸ், தேநீர் விற்பனை செய்து வந்தார். சிறிய வீட்டில் வசித்து வந்த தாமோதர் தாஸ்-ஹீராபென் தம்பதிக்கு சோமா பாய் மோடி, அம்ரித் மோடி, நரேந்திர மோடி, பிரகலாத் மோடி, பங்கஜ் மோடி ஆகிய 5 மகன்களும், வசந்திபென் மோடி ஆகிய மகளும் பிறந்தனர்.
கணவரை இழந்து, பிள்ளைகள் பெரியவர்களான பிறகு கடைசி மகன் பங்கஜ் மோடியுடன் குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள ரேசான் பகுதியில் ஹீராபென் வசித்து வந்தார்.
» ராகுல் காந்தியின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்: டெல்லி போலீஸ்
» ரிஷப் பந்த் விரைந்து நலம் பெற பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி
2014-ல் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று டெல்லியில் குடியேறிய பிறகு, அவ்வப்போது காந்திநகருக்குச் சென்று தாயை சந்தித்து, ஆசிபெற்று வந்தார். கடந்த ஜூன் 18-ம் தேதிஹீராபென் தனது 100-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது பிரதமர்மோடி நேரில் சென்று தாய்க்கு வாழ்த்துகூறி, அவரிடம் ஆசி பெற்றார். அண்மையில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போதும் தாயை சந்தித்தார்.
கடந்த 28-ம் தேதி ஹீராபென்னுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், காந்திநகரில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று பிரதமர் மோடி காந்தி நகருக்குச் சென்று தாயின் உடல்நிலையை விசாரித்துவிட்டு, டெல்லி திரும்பினார்.
மருத்துவமனையில் 6 சிறப்பு மருத்துவர்களும், செவிலியர்களும் ஹீராபென்னுக்கு இரவு-பகலாக சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து நேற்று காலை 7.45 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து நேரடியாக காந்திநகர் ரேசான்பகுதியில் உள்ள தம்பியின் வீட்டுக்குச் சென்று, தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் வந்த பிறகு, சமுதாய வழக்கத்தின்படி இறுதிச் சடங்குகள் தொடங்கின. பிரதமர் மோடியும், உறவினர்களும் ஹீராபென்னின் உடலை சுமந்து சென்றனர். அங்கு பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. காலை 9.30 மணிக்கு ஹீராபென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, தாயின் உடலுக்கு தீ மூட்டினார்.
அரசு மரியாதை இல்லாமல், சாதாரண பெண் என்ற வகையிலேயே இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. முக்கிய விஐபிக்கள் யாரும் பங்கேற்கவில்லை. காந்திநகரில் சிறியஅளவில்கூட போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
பிரதமரின் தாயார் என்ற வகையில், ஹீராபென்னுக்கு அரசு மரியாதை வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. குஜராத்தில் தற்போது பாஜகஅரசு ஆட்சியில் உள்ளது. எனினும், தனதுதாயாருக்கு அரசு மரியாதை வழங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இந்த எளிமையை கட்சி வேறுபாடின்றி, அனைத்துத் தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக பணிக்குத் திரும்பினார்: மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவுக்கு நேரில் சென்று ரூ.7,800 கோடிமதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாய் ஹீராபென்னின் மரணத்தால் அவரால் கொல்கத்தாவுக்குச் செல்லமுடியவில்லை. எனினும், தாயின் இறுதிசடங்குக்குப் பிறகு காலை 11 மணிக்கு காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து காணொலி வாயிலாக மேற்குவங்கத்தின் அரசு நலத் திட்டங்களை தொடங்கிவைத்தார்.
அப்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காணொலியில் பேசும்போது, “உங்களது தாய், எங்களுக்கும் தாய். நீங்கள் சிறிது ஓய்வெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மகனாக தாய்க்கு இறுதிச் சடங்குகளைசெய்த மோடி, அரசு அலுவல்களை ரத்து செய்யாமல், உடனடியாக பணிக்குத் திரும்பியதை அனைவரும் பாராட்டி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago