காங்கிரஸ் கட்சிக்கு சரத் பவார் திடீர் பாராட்டு - அரசியல் பின்னணி குறித்து அலசும் ஊடகங்கள்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மகாராஷ்டிராவை சேர்ந்த சரத் பவார் அம்மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். தனது 27-வது வயதில் முதல்முறையாக எம்எல்ஏவான இவருக்கு தனது மாநிலத்தில் இப்போதும் செல்வாக்கு உள்ளது. என்றாலும் தனித்து ஆட்சிபுரியும் அளவுக்கு இல்லை. இதனால்தான் அவர் காங்கிரஸுடனும் பிறகு சிவசேனா உடனும் சேர்ந்து ஆட்சி அமைத்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு நடந்த 1991 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது பிரதமர் பதவிக்கான பட்டியலில் சரத் பவாரும் இருந்தார். ஆனால் இந்த வாய்ப்பை பி.வி.நரசிம்ம ராவ் தட்டிப் பறித்தார்.

இத்தனைக்கும் 1978-ல் இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸிலிருந்து சரத் பவார் வெளியேறி இருந்தார். ஜனதா கட்சியுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் அவர் ஆட்சி அமைத்தது இதற்கு காரணமானது. அவரை இந்திராவின் மகனான ராஜீவ் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு கொண்டுவந்தார். பிறகு 1999-ல் சோனியா ஒரு வெளிநாட்டவர் என்ற பிரச்சினையை எழுப்பி காங்கிரஸில் இருந்து 2-வது முறையாக வெளியேறினார் சரத் பவார். இதே விவகாரத்தில் தன்னுடன் வெளியேறிய பி.ஏ.சங்மா மற்றும் தாரீக் அன்வருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) தொடங்கினார்.

பிறகு காங்கிரஸுடன் கூட்டணிசேர்ந்த அவர் 2004 முதல் 2014 வரைபிரதமர் மன்மோகன் தலைமையிலான அரசில் விவசாயம் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். 2014-ல் மத்தியில் ஆட்சி மாறினாலும் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என இரண்டு தரப்பிலும் ஒட்டுமொத்தமாக சாய்ந்து விடாமல் நடுநிலை வகித்து வருகிறார். நவம்பர் 2019-ல் அவரது கட்சி பாஜகவுடனும் இணைந்து ஒரு வாரம் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. இது போன்றவற்றின் பலனாக அவருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் கிடைத்தது.

எனினும் நாட்டின் இரண்டு உயரிய பதவிகளில் தன்னால் அமர முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு இருந்து வந்தது. தற்போது இவற்றில் ஒன்றை குறிவைத்துள்ளார் சரத்பவார்.

காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்நாளில் 20 வருடங்களுக்குப் பிறகு புனேவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சரத்பவார் சென்றார். பாஜக தலைவர்களின் பெயரை குறிப்பிடாமல் அவர் பேசும்போது, “காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகும் என்று சிலர் பேசுகிறார்கள். இதற்கு சாத்தியமில்லை. உண்மையில், இந்தியாவை முன்னேற்ற வேண்டுமானால் நாம் காங்கிரஸை முன்னே கொண்டுசெல்ல வேண்டும். காங்கிரஸின் கொள்கை என்ன என்பது பிரச்சினையில்லை. இக்கட்சியின் வரலாற்றில் நம் நாட்டுக்கு செய்த தொண்டு அதிகம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸை விட்டு 2 முறை வெளியேறிய சரத் பவார், தற்போது அக்கட்சியை பாராட்டிப் பேசுவதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கம் குறித்து ஊடகங்கள் அலசத் தொடங்கியுள்ளன.

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக சரத் பவார் முயற்சிப்பதாக தெரிகிறது. இதே நோக்கத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் உள்ளார்.

எனினும் காங்கிரஸ் ஆதரிக்கும் தலைவருக்கே அந்த வாய்ப்பு கிடைக்கும் என சரத்பவார் கருதுகிறார். இதற்காகவே அவர் காங்கிரஸுக்கு ஆதரவான கருத்துகளை பேசத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்கும் மற்றொரு விருப்பமும் சரத் பவாருக்கு உள்ளது. இந்த இணைப்பு சாத்தியமானால்தான் தம்மால் பிரதமர் வேட்பாளராக முடியும் என்றால் அதற்கும் அவர் தயாராக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அவரது ஒரே வாரிசான சுப்ரியா சுலே மகராஷ்டிராவின் பாராமதி தொகுதி எம்.பி.யாக உள்ளார். இந்த வெற்றியை அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பெற்றாலும் சுப்ரியாவுக்கு என்சிபி-யை கட்டுப்படுத்தும் முழு அதிகாரம் இல்லை. சுப்ரியாவை விட, சரத் பவாரின் சகோதரர் மகனான அஜீத் பவார் முக்கியத் தலைவராக உள்ளார். என்றாலும் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் தலைமை அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இத்தனைக்கும் அஜீத் பவார் மூன்றுமுறை என்சிபி கூட்டணி ஆட்சியில் மகராஷ்டிரா துணை முதல்வராக இருந்தவர். சரத் பவாரின் மற்றொரு சகோதரரின் பேரனான ரோஹித் ராஜேந்தர் பவார் கட்சியில் இணைந்து எம்எல்ஏ ஆனபோதிலும் பெரிய தாக்கம் இல்லை.

இதனால் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்கும் பேச்சுக்கு சரத்பவார் இன்னும் முற்றுப்புள்ளி வைக்காமல் உள்ளார். இவரது நோக்கம் என்னவாகும் என்பது, 2024 மக்களவை தேர்தலில் தெளிவாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்