மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் ஜாமீனில் விடுவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனில் தேஷ்முக் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனில் தேஷ்முக், மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி பாம்பே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தேஷ்முக்கின் மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் அவருக்கு கடந்த 12-ம் தேதி நிபந்தனை ஜாமின் வழங்கியது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி மும்பையை விட்டு வெளியே செல்லக் கூடாது, ரூ. 1 லட்சம் பிணைத் தொகை கட்ட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இதனிடையே, பாம்பே உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை 10 நாட்களுக்கு நிறுத்திவைத்தது. பின்னர், டிசம்பர் 27-ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டது. உத்தரவை நிறுத்திவைக்கும் காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட இருந்தார்.

எனினும், சிபிஐ மேலும் ஒரு வழக்கை அவர் மீது தொடர்ந்தது. அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கவும் எதிர்ப்பு தெரிவித்தது. சிபிஐயின் இந்தக் கோரிக்கையை நிராகரித்த பாம்பே உயர் நீதிமன்றம், அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, அனில் தேஷ்முக் சிறையில் இருந்து இன்று (டிச. 28) வெளியே வந்தார். அவரை தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவாரும், கட்சித் தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE