மகாராஷ்டிராவுக்கு ஒரு அங்குலம் நிலம்கூட விட்டுத்தர மாட்டோம்: கர்நாடக காங்கிரஸ் தலைவர்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவின் ஒரு அங்குலம் நிலம்கூட மகாராஷ்டிராவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடகாவில் 'எல்லை'ப் பிரச்சினை என்று எதுவும் இல்லை. மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவிலும் இருக்கும் பாஜக அரசுகள்தான் இதை பிரச்சினையாக்குகின்றன. கர்நாடகாவிலும், மகாராஷ்டிராவிலும், மத்தியிலும் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. மூன்று இன்ஜின் ஆட்சி இது.

கர்நாடகாவின் ஒரு அங்குலம் நிலத்தையும் நாங்கள் மகாராஷ்டிராவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம். மகாராஷ்டிராவும் இதற்காக முயலக் கூடாது. முயன்றாலும் ஒன்றும் நடக்காது. ஆனால், பாஜகவினர் விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.

கர்நாடகாவில் உள்ள பாஜக எம்.பிக்களுக்கோ, எம்.எல்.ஏக்களுக்கோ அவர்களின் தலைமை முன்பு பேச துணிச்சல் இல்லை. எனவே, கர்நாடகாவில் இருந்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை முதல்வர் பசவராஜ் பொம்மை டெல்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அந்தக் குழு உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து பேச வேண்டும். இவ்விஷயத்தில் அமித் ஷா கர்நாடகாவுக்கு வெளிப்படையான உறுதிமொழியை அளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE