Rewind 2022 | இந்தியா முழுவதும் 35 டாப்லர் வானிலை ரேடார்கள் - புவி அறிவியல் அமைச்சகம் செய்தது என்ன?
புதுடெல்லி: இந்தியா முழுவதும் டாப்லர் வானிலை ரேடார்கள் பொருத்தப்பட்ட மொத்த எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. 2022-ல் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயல்பாட்டுகள் - ஒரு பார்வை:
- சென்னை, லே, தில்லி அயநகர், மும்பை, உத்தராகண்டின் சுர்கந்தா தேவி, ஜம்மு காஷ்மீரின் பனிகால் டாப் ஆகிய இடங்களில் புதிதாக 6 டாப்லர் வானிலை ரேடார்கள் நிறுவப்பட்டுள்ளன. இதையடுத்து ரேடார்கள் பொருத்தப்பட்ட மொத்த எண்ணிக்கை 35- ஆக அதிகரித்துள்ளது.
- கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டு சராசரி புயல் பாதை முன்னறிவிப்பு பிழைகள் பெருமளவு குறைந்துள்ளன. புயல், கனமழை, வெப்ப அலை, கடும்குளிர், பனிப்பொழிவு போன்ற கடும் வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் திறன் 40 முதல் 50 சதவீதம் வரை கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
- நவ்காஸ்ட் எனப்படும் தற்போதைய உள்ளூர் அறிவிப்பு மையங்கள் கடந்த ஆண்டு 1089 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 1124- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நகர வானிலை கணிப்பு மையங்களின் எண்ணிக்கை 1069-ல் இருந்து இந்த ஆண்டு 1181- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- தெற்காசிய வெள்ள வழிகாட்டு நடைமுறை விரிவுப்படுத்தப்பட்டு பங்களாதேஷ். பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு வழிகாட்டு தகவல்களை வழங்குகிறது.
- அதிக திறன்கொண்ட காற்றுத்தர முன்னறிவிப்பு எச்சரிக்கை அமைப்பு, மேம்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் காற்று மாசு தொடர்பாக 88 சதவீதம் அளவுக்கு துல்லியமான தகவல்கள் பெறப்படுகின்றன.
- வேளாண் தானியங்கி வானிலை மையங்கள், புதிதாக 200 வேளாண் அறிவியல் நிலைய வளாகங்களில் நிறுவப்பட்டுள்ளன.
- கடுமையான வானிலை தொடர்பாக தாக்கத்தின் அடிப்படையிலான முன்னறிவிப்புகள் மாவட்ட மற்றும் நகர அளவில் வெளியிடப்பட்டுள்ளன. சூழல் ஆய்வுப்படுக்கை மத்திய பிரதேசத்தின் செகோர் மாவட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.
- கடலோர நீர்தரம் தொடர்பான தன்னாட்சி ஆய்வகங்கள், கொச்சி மற்றும் விசாகப்பட்டிணத்தில் மே 2022-ல் நிறுவப்பட்டன.
- கடலோர புவி அமைப்பியல் தொடர்பான தகவல்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள கடலோர பகுதிகளில் வரைபடமாக்கப்பட்டுள்ளன.
- இந்திய-நார்வே கூட்டுச் செயல்பாட்டில் சென்னை மற்றும் புதுச்சேரியில் 2 முக்கிய கடல்சார் ஆய்வுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
- ஜிஐஎஸ் எனப்படும் புவி தகவல் நடைமுறை அடிப்படையில் ‘டிஜிட்டல் கோஸ்ட் இந்தியா’ எனப்படும் தரவு தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது கடலோரம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் சூழல் மாசுபாடு, கடல்பகுதி மாற்றங்கள், சூழல் மாற்றம் போன்ற தகவல்களை வழங்குகிறது. இதன் மூலம் கடலோர நிர்வாகம் தொடர்பாக திறன்மிக்க முடிவுகளை எடுக்க முடிகிறது.
- கடலோர தூய்மை இயக்கங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. விடுதலைப் பெருவிழாவின் 75-வது ஆண்டை முன்னிட்டு 75 கடற்கரைப் பகுதிகளில் தூய்மைப்பணிகள் நடைபெற்றன. இதில் பொது மக்கள், மீனவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர் 58,100 தன்னார்வலர்கள் பங்கேற்று 64,714 கிலோ குப்பைகளை சேகரித்தனர்.
- தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் மேலும் 6 இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் மையங்களை நிறுவி வருகிறது.
- உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சுனாமி அழுத்தப்பதிவு கருவியான (பிபிஆர்) சாகர் பூமியின் மாதிரி வடிவ கருவி செப்டம்பர் 17-ந் தேதி சென்னையில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன.
- 2022 ஆகஸ்ட் 1-ந் தேதி நாடாளுமன்றத்தின் அண்டார்டிகா மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்பாக அண்டார்டிகா ஒப்பந்த நடைமுறைக்கு ஏற்ப அண்டார்டிகா கடல் வளங்களை நிர்வகிப்பதற்கான கட்டமைப்பை இந்த சட்டம் வழங்குகிறது. அண்டார்டிகாவின் சூழலைப் பாதுகாக்கவும், அதன் அடிப்படையில் இந்தியாவின் நலன்களை நோக்கமாகக் கொண்டும் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
- ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்து பயன்படுத்தும் இந்தியாவின் முக்கியத் திட்டமான ஆழ்கடல் இயக்கம் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், கடலில் 6000 மீட்டர் ஆழத்தில் 3 பேரை பணியில் ஈடுபடுத்தும் வகையில் நீர்மூழ்கி கப்பல் உருவாக்கப்பட்டு முதல் கட்ட சோதனை நடைபெற்றுள்ளது.
- சர்வதேச ஆழ்கடல் பயிற்சி மையம் 10 பயிற்சி திட்டங்களையும், ஒரு கருத்தரங்கத்தையும், காணொலி வாயிலான ஒரு கூட்டத்தையும் நடத்தியுள்ளது. இதன் மூலம் 424 இந்தியர்கள் மற்றும் 108 வெளிநாட்டவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
- புவி அமைப்பு அறிவியல் மற்றும் பருவ நிலை தொடர்பான மேம்பாட்டு இயக்கம் 200 விஞ்ஞானிகளுக்கு 5 பயிற்சி திட்டங்களை நடத்தியுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்