புதுடெல்லி: உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் பரவி வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், கரோனா தடுப்பு நடைமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றி, விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
2014-ல் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, மாதந்தோறும் வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். இதன்படி, 96-வது மனதின்குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த காலம் பற்றிய மதிப்பீடுகளும், நிகழ்காலம், எதிர்காலம் குறித்த லட்சியங்களும் நமக்கு உத்வேகத்தை அளிக்கின்றன.
2022-ம் ஆண்டு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டில், சுதந்திரமடைந்த 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடினோம். இந்த ஆண்டிலே, உலகின் பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியா 5-ம் இடத்தைப் பிடித்தது. 220 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் படையில் இணைக்கப்பட்டது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்தோம்.
» திரிபுரா | மக்கள் நலனுக்காக நடமாடும் பொது சேவை மையம் அறிமுகம்
» அதிக கோல்கள், அசிஸ்ட்கள்: ரொனால்டோ VS மெஸ்ஸி... 2022-ல் யார் டாப்?
நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த காசி தமிழ்ச் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். கடந்த ஆகஸ்ட் மாதம் வீடுதோறும் மூவர்ணக் கொடியை ஏற்றி, தேசப்பற்றை பறைசாற்றினோம். சுமார் 6 கோடிக்கும் மேற்பட்டோர் தேசியக் கொடியுடன் செல்ஃபி படத்தை பகிர்ந்தனர். இதே ஆண்டில் ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. அடுத்த ஆண்டு நாடு முழுவதும் ஜி-20 மாநாடுகளை நடத்த உள்ளோம்.
மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், அவரது போதனைகளையும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம். நாட்டின் உள்கட்டமைப்பு, கல்வி, வெளியுறவுக் கொள்கை என அனைத்திலும் இந்தியாவை புதிய உச்சிக்கு கொண்டுசெல்ல அவர் பாடுபட்டார்.அவருக்கு மனதின் ஆழத்தில்இருந்து மரியாதை செலுத்துகிறேன்.
யோகா, ஆயுர்வேதம்
இந்தியர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகத் திகழும் யோகா, ஆயுர்வேதம் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது.
மும்பையின் டாடா நினைவு மையம், ஆய்வு, கண்டுபிடிப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிகரமாக விளங்குகிறது. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதில் யோகா முக்கியப் பங்கு வகிப்பதாக இந்த மையம் சான்றுகளோடு விளக்கம் அளித்துள்ளது. இதுஇந்தியாவின் பாரம்பரிய சிகிச்சைக்குக் கிடைத்த வெற்றியாகும்.
அமெரிக்க இதயவியல் கல்லூரிஇதழில் வெளியான ஆய்வறிக்கையில், உணர்வு இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
இதேபோல, நரம்பியல் தொடர்பான அறிவியல் இதழில் வெளியான ஆய்வறிக்கையில், ஒற்றைத் தலைவலிப் பிரச்சினைக்கு யோகாவால் நிவாரணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதய நோய், மன அழுத்தம், தூக்கமின்மை, மகப்பேறுக் காலங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கும் யோகா தீர்வளிக்கிறது.
உலக ஆயுர்வேத மாநாட்டில் பங்கேற்க அண்மையில் கோவா சென்றிருந்தேன். ஆயுர்வேதத்தின் பலன்கள் உலகுக்கு விளக்கப்பட்டன. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் பலன்களை நாம் கண்கூடாகப் பார்த்தோம். யோகா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய சிகிச்சை முறைகள் குறித்த பயனுள்ள தகவல்களை, சமூக வலைதளங்களில் பகிர வேண்டுகிறேன்.
இந்தியாவில் தற்போது `காலா அஜார்' எனப்படும் கருங்காய்ச்சல் சவாலாக உருவெடுத்துள்ளது. மணல் கொசுக்கள் கடிப்பதால் இதுபரவுகிறது. ஒருவருக்கு கருங்காய்ச்சல் ஏற்பட்டால் மாதக்கணக்கில் நீடிக்கிறது. ரத்த சோகை ஏற்பட்டு, உடல் எடை குறைகிறது.
கருங்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்களிடம் ஓர் வேண்டுகோளை முன்வைக்கிறேன். மணல் கொசுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். விரைவாக காய்ச்சலை அடையாளம் கண்டு, உடனடியாக மருத்துவரை அணுகி,உரிய சிகிச்சை பெற வேண்டும்.மக்கள் விழிப்புடன் இருந்தால்கருங்காய்ச்சலைக் கட்டுப்படுத்தலாம்.
அதேபோல, அனைவரின் ஒத்துழைப்புடன் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயிலிருந்து இந்தியா விடுபட முனைப்புடன் பணியாற்றி வருகிறோம்.
உள்நாட்டு தயாரிப்புகள்
சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் உலகின் தலைசிறந்த 10 திட்டங்களில், மத்திய அரசின் தூய்மைகங்கை திட்டம் இடம் பிடித்திருக்கிறது. இது இந்தியாவுக்கு கிடைத்த பெரிய கவுரவம்.
கங்கை நதிப் பகுதிகளில் மரம் நடுதல், படித் துறைகளைத் தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கங்கை ஆரத்தி, தெருமுனை நாடகங்கள், ஓவியங்கள், கவிதைகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கங்கையில் ஹில்ஸா மீன்,கங்கை டால்பின்கள், பலவகையான முதலைகளின் இனப்பெருக்கம் அதிகரித்திருக்கிறது. கங்கை நதியைத் தூய்மையாகப் பராமரிப்பது நமது கடமையாகும்.
உள்நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்க வேண்டும். உள்நாட்டுத் தயாரிப்புகளை மட்டுமே, பரிசுப் பொருட்களாக வழங்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதுடன், உள்ளூர் மக்களின் எதிர்காலம் ஒளிமயமாகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக அமைந்து, புதியசிகரங்களைத் தொட உறுதியேற்போம்.
கண்டிப்புடன் பின்பற்றுங்கள்..
பல்வேறு திருவிழாக்களை உற்சாகமாகக் கொண்டாடி வரும்இந்த தருணத்தில், அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகிறேன். உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டுகிறேன்.
முகக்கவசம் அணிவது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக்கழுவுவது, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுதல் என கரோனா தடுப்பு நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாம் எச்சரிக்கையாக, பாதுகாப்பாக இருந்தால், மகிழ்ச்சியுடன் வாழலாம்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago