எல்லையை மட்டுமின்றி நமது சந்தையையும் சீனா ஆக்கிரமித்து இருக்கிறது: அகிலேஷ் யாதவ்

By செய்திப்பிரிவு

லக்னோ: சீனா எல்லையை மட்டுமல்ல, நமது சந்தையையும் ஆக்கிரமித்திருக்கிறது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி: இந்த மாதத்தின் தொடக்கத்தில், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள தவாங் பகுதியில் ஆக்கிரமிப்பில் ஈடுபட முயன்ற சீன ராணுவத்தை, இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. இது குறித்து கடந்த 13ம் தேதி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தவாங் பகுதியில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட முயன்றதாகவும், சரியான நேரத்தில் நமது ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக சீன துருப்புகள் தங்களின் பழைய நிலைக்குச் சென்றதாகவும் குறிப்பிட்டார். மேலும், எல்லையைப் பாதுகாப்பதில் நமது ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராணுவ கமாண்டர் நேரில் ஆய்வு: இந்நிலையில், கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள தவாங் பகுதிக்கு இந்திய ராணுவ கமாண்டர் ராணா நேரில் சென்று நிலைமையை இன்று ஆய்வு செய்தார். அப்போது, மிகுந்த மன உறுதியுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நமது ராணுவ வீரர்களை அவர் பாராட்டியதாக செய்தி வெளியாகி உள்ளது.

அகிலேஷ் யாதவ் கருத்து: இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரியில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சீனா எப்போதுமே நமக்கு அச்சுறுத்தல்தான் என குறிப்பிட்டார். சீனா நமது எல்லையை மட்டும் ஆக்கிரமிக்கவில்லை என்றும், நமது சந்தையையும் ஆக்கிரமித்திருப்பதாகவும் அவர் கூறினார். எல்லை அச்சுறுத்தல், சந்தை அச்சுறுத்தல் என இரண்டு வகையான அச்சுறுத்தல்களை நமது நாடு சீனாவால் எதிர்கொண்டு வருவதாகவும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். எனவே, சீனா விஷயத்தில் மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE